)
Tamilnadu Government : தமிழ்நாட்டிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்களை மட்டுமே கொண்ட குடும்பங்கள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களைப் பெற்றுச் செல்வதில் ஏற்படும் இடர்பாடுகளை களைய, அவர்களின் வீடுகளுக்கே சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகம் செய்வதற்கான தாயமானவர் திட்டம் அண்மையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. சென்னை, தர்மபுரி, கடலூர், நாகப்பட்டினம், ஈரோடு, இராணிப்பேட்டை, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 128 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,404 குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னோட்டமாக ரேஷன் பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை இணை மற்றும் துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட பணிவாளர்கள் கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தின் நோக்கம்
இத்திட்டத்தினால் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்களை மட்டுமே கொண்ட குடும்பங்கள் பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை வீடுகளிலேயே பெற்று பயனடைந்தனர் எனத் தெரிவித்து சமூகநலம் சார்ந்த இத்திட்டம் நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய உதவும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி
இத்திட்டம் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நியாயவிலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகள் மற்றும் கள நிலவரத்தைப் பொருத்து அந்தந்த பகுதிகளுக்கேற்ப நாளினை தீர்மானம் செய்து கொள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை அனுமதிக்கலாம் என இப்போது வெளியிடப்பட்டுள்ள இதுதொடர்பான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவிநியோகத் திட்டப் பொருட்களைக் குறிப்பிட்ட நாளில் பெற்றுக்கொள்ள முடியாத குடும்ப அட்டைதாரர்கள் எவரேனும் இருப்பின், அவர்களை பின் நாட்களில் தொடர்புடைய நியாயவிலைக் கடையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
கூட்டுறவுத்துறை, இயக்குநர் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துடன் ஒருங்கிணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும். இத்திட்டத்தினால் வரும் ஒவ்வொரு மாதத்திலும் பயன்பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளிகளின் மாவட்டம் மற்றும் வட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டினை முன்நகர்விலேயே வழங்கிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டுறவு சார்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்) மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், ஒதுக்கீட்டின்படி பொது விநியோகத் திட்டப் பொருட்களின் நகர்வுப் பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் நுகர்வு பணிகள் சரியாக நடைபெறுவதை உறுதி செய்து கொள்ளவும் வேண்டும். மண்டல இணைப்பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்) மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்கள் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல் வேண்டும்
நிபந்தனைகள்
1. குழு வாரியாக நகர்வு வழித்தடம் (Route Chart) ஏற்படுத்தப்பட்டு அதன்படி ஒவ்வொரு மாதமும் விநியோகம் செய்ய வேண்டும்.
2. வாகனம் மூடிய வாகனமாக இருக்க வேண்டும்.
3. வாகனத்தில் எடைத்தராசு, POS இயந்திரம் முதலியவை கொண்டு செல்லப்பட வேண்டும்.
4. தேவை இருப்பின் பதிவேடுகள் / படிவங்கள் அனைத்தும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும்.
5.கட்டுப்பாட்டுப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் சேதமின்றி வாகனத்தில் கொண்டு சென்று விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
6. தரமான கட்டுப்பாட்டுப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்படவேண்டும்.
7. மின்னணு எடைத் தராசின் மின்கலம் மற்றும் விற்பனை முனையக் கருவி (POS) ஆகியவை போதுமான அளவு மின்னேற்றம் (Charging) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
8. வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டுப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்களுக்கு தகுந்த இடப்பெயர்வு காப்பீடு (Transit Insurance) செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ