)
திருச்சி: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் அனைவரும் எந்த விதமான சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்படும் என்றும், இந்து அறநிலையத் துறையை மேம்படுத்தும் வகையில் விரைவில் பல வித சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில், திருவானைக்காவலில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், 'கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பொது நலன் சார்ந்த நடவடிக்கைகளைத் தாமதப்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
"இந்து சமய அறநிலையத் துறை விரைவில் சீரமைக்கப்படும். இதற்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது; இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளை அறிந்து, அவற்றை விரைவாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். குறைதீர் கூட்டம் போன்ற இத்தகைய சந்திப்புகள் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனத்துக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், கட்டண உயர்வு தொடர்பாக வெளியான தகவல்களை மறுத்தார். தவெக அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
"நாங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளையே தொடர்ந்து பின்பற்றுகிறோம். பக்தர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு அவை மறுஆய்வு செய்யப்படும். மக்களின் நலனுக்கு எதிரான எதையும் நாங்கள் ஒருபோதும் திணிக்க மாட்டோம்," என்று அவர் கூறினார். விஐபி (VIP) தரிசனம் தொடர்பான விவகாரத்தில், அது குறித்த கவலைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும், பக்தர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் (Yatri Nivas) தங்குவதற்கு இணையவழியில் முன்பதிவு செய்வதாகக் கூறும் பல போலி போர்ட்டல்கள் பற்றிய புகார்கள் பல நாட்களாக இருந்து வந்தன. இது பற்றி குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், போலியான இணையதளங்களை இயக்கி வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தார். யாத்ரி நிவாஸில் முன்பதிவு செய்வதற்காக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிமும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என கூறிய அமைச்சர் ரமேஷ், இதை கருத்தில்கொண்டு அறநிலைத் துறை பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மெற்கொண்டு வருவதாகவும், அவற்றை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.
தமிழக கோயில்களின் செயல்முறைகள் குறித்து தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில், அறநிலைத் துறையில் பல வித சீர்திருத்தங்கள் படிப்படியாக மெற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில், கோயில்களின் நிலை விரைவில் வியத்தகு வகையில் மேம்படும் என்பதையும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.