)
Thirumavalavan Demanding TVK Governnment : தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக, தென்மாவட்டங்களில் சாதிய ஆணவப் படுகொலை தொடர்ச்சியாக நடைபெற்று வருவது பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. மேலும், ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்றும்படியும் தவெக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.
அந்த வகையில், தொடர்ச்சியாக ஆணவப் படுகொலை தடுப்புச் சட்ட கோரிக்கையை முன்வைத்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கடந்த ஒரு வாரம் எவ்வித அறிக்கையும் வெளியிடாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) இரவு இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் சமீபத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்த இரு ஆணவப் படுகொலை சம்பவங்களையும், அச்சம்பவத்தின் மீது எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளையும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி சம்பவம்: "திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தைச் சார்ந்த ராமலட்சுமி என்பவர் தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைக் காதலித்ததால், அவரை அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார். அதனையொட்டி கொலையாளி முத்துக்கிருஷ்ணனை காவல்துறையினர் உடனடியாக கைதுசெய்துள்ளனர்.
தூத்துக்குடி சம்பவம்: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மயிலோடை கிராமத்தைச் சார்ந்த அபி செல்வி என்பவர் ஒரு தலித் இளைஞரைக் காதலித்தார் என்பதால், அவரது அண்ணன் சிவஞானம், அம்மா எஸ்தர் பாலின் மற்றும் அவரது உறவினர் சங்கரலிங்கம் ஆகியோர் அவருக்கு நஞ்சு கொடுத்தும் கடுமையாகத் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர்.
ஆனால், அபிசெல்வி தற்கொலை செய்துகொண்டார் என நாடகமாடி உள்ளனர். பின்னர், விசாரணையில் இது தற்கொலையல்ல; கொலை என உடற்கூராய்வு அறிக்கை' அம்பலப்படுத்தி உள்ளது. அதனடிப்படையில், அவரது தாயார் எஸ்தர் பாலின் மற்றும் சிவஞானத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்" என அறிக்கையில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது என கூறியுள்ள திருமாவளவன், தமிழ்நாட்டில் குறிப்பாக, தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது என தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
இத்தகைய சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கை என மீண்டும் அவரதை கோரிக்கையை சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தி உள்ளது என்றும்; ஆனால், அந்த வழிகாட்டுதலை ஒன்றிய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலையளிக்கிறது என்றும் திருமாவளவன் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவரது அறிக்கையில், "இந்தியாவிலேயே முதன்முறையாக 2019ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அரசு ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அடுத்து, கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆணவக் கொலைகளுக்கு எதிராக 'கௌரவம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம்-2026' நிறைவேற்றப்பட்டுள்ளது" என திருமாவளவன் நினைவுக்கூர்ந்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது என்றும்; அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்தாண்டு நெல்லையில் மென்பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கென ஒரு சட்டத்தை இயற்றிட வேண்டும் என தவெக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தற்போதைய தவெக அரசு கே.என். பாஷா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது. விசிகவின் வன்னி அரசு சமூகநீதித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். விசிகவின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். அப்படியிருந்தும், இன்னும் அரசியல் கூட்டணியாக தவெக - விசிக உருவெடுக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் சமீபத்தில் கூறியிருப்பது குறிப்படித்தக்கது.