)
Tamil Nadu Politics Latest News Updates: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் நேற்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் பீகார் பயணம் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், "பீகாருக்குச் சென்றுள்ள ராகுல் காந்தி, 65 லட்சம் ஏழை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவருடன் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பிரச்சாரத்திற்குச் சென்றிருக்கிறார். இதை நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. யார் கூப்பிட்டாலும் பின்னால் சென்றுவிடலாமா? தமிழ்நாட்டின் பெருமையை நாம் நிலைநாட்ட வேண்டாமா?.
முதலில், பீகாரில் என்ன நடந்தது என்பதை நமது முதலமைச்சர் தனது உளவுத்துறை மூலம் விசாரித்துத் தெரிந்துகொண்டு சென்றிருக்க வேண்டும். அங்கு நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில், 22 லட்சம் பேர் இறந்து போனவர்கள், 36 லட்சம் பேர் வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், 7 லட்சம் பேர் இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள். இறந்து போனவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி போராட்டம் நடத்தினால், அதற்கு நமது முதலமைச்சர் ஆதரவு தெரிவிக்கலாமா? இது என்ன நியாயம்?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், இதேபோல, முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே சுமார் 10 ஆயிரம் போலி வாக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது என்றும் முதலில் அதை சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் பேசினார். தமிழ்நாட்டிலும் இதுபோல இறந்து போனவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள் பெயர்களை நீக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கேரளா ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை பார்த்து நயினார் நாகேந்திரன் மிரண்டு போயிருப்பதாகவும், காரணம் அவர்களின் மதச்சாயம் வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற அச்சம் பாஜகவுக்கு எழுந்துள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு சில நாள்களுக்கு முன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன், "அமைச்சர் சேகர்பாபு என்னைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் என் நண்பர்தான். நானும் அவரும் 'அம்மா'வின் (ஜெயலலிதாவின்) அரசியல் பள்ளியில் ஒன்றாகப் பயின்றவர்கள். நான் அமைச்சராக இருந்தபோது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்; இப்போது அவர் அமைச்சராக இருக்கும்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று தெரியவில்லை. ஒருவேளை, பயத்தில் அப்படிப் பேசியிருக்கலாம். பரவாயில்லை, அவர் அப்படியே நினைத்துக்கொள்ளட்டும்" என்றார்.
திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினரான அவர் தனது தொகுதி பிரச்னை குறித்த கேள்விக்கு, "திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய ரூ.1000 கோடியில், ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்ட பாளையங்கோட்டை மற்றும் ஜங்ஷன் பேருந்து நிலையங்கள் இரண்டு ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து நான் பலமுறை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவிடம் பேசி உள்ளேன்.
முதலமைச்சர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியே திறந்து வைத்துவிட்டார். ஆனால், சுற்றுச்சூழல் அனுமதி, தீயணைப்புத் துறை அனுமதி என எதுவும் இன்னும் வாங்கப்படவில்லை. மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று கேட்கும் இவர்கள், கொடுத்த பணத்தில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறக்காமல், அதன் மீது சுவரொட்டிகளை ஒட்டி வைத்திருக்கிறார்கள். இதுதான் இவர்கள் நிர்வாகத்தின் லட்சணம்" என கடுமையாக சாடினார்.
மேலும் தொடர்ந்து, "பெரிய கோயில்களை நிர்வகிக்க தேவஸ்தானம் போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தை நான் வரவேற்கிறேன். பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையே, அறநிலையத்துறை என்ற ஒரு துறையே இருக்கக் கூடாது என்பதுதான். 2026ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, நிச்சயமாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும் திருமாவளவன் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "அதிமுகவை இன்னும் திராவிட இயக்கமாகவே பார்க்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். அப்படியானால், அவர் இருக்கும் கூட்டணியை விட்டுவிட்டு, ஜெயிக்கப் போகும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டியதுதானே?
சமீபத்தில் ஒரு காணொளியில், அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளைப் பாராட்டிப் பேசியதை நான் பார்த்தேன். அவர் ஒரு நல்ல நண்பர். சில கருத்துக்களைத் தெளிவாகப் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் என்பது 100 ஆண்டுகளாக நாட்டுக்குச் சேவை செய்யும் ஒரு இயக்கம். திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் எங்கள் கூட்டணிக்கு வருவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ