TN Assembly Election 2026: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தேர்தல் பிரசாரத்திற்காக 2 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்தார். ஏப்ரல் 12 ஆம் தேதி அவர் சாத்தூர், ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 13 ஆம் தேதி அறந்தாங்கி, கந்தர்வகோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

TN Assembly Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரபடுத்தி வருகின்றன. ஸ்டார் தலைவர்கள், தேசிய தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பல்வேறு தொகுதிகளின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.
அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தேர்தல் பிரசாரத்திற்காக 2 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்தார். ஏப்ரல் 12 ஆம் தேதி அவர் சாத்தூர், ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 13 ஆம் தேதி அறந்தாங்கி, கந்தர்வகோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திங்களன்று தஞ்சாவூரில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட நிதின் நபின், 'ஒரே குடும்பத்தின் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிய' உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சனாதன மரபுகளை அவமதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
'இங்குள்ள மக்கள், தற்போது நடைபெற்று வரும் 'ஒரே குடும்பத்தின் ஆட்சியை' வேரோடு பிடுங்கி எறிய விரும்புகின்றனர். ஊழலில் முதலிடத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு மாநில அரசு உண்டென்றால், அது தமிழ்நாட்டின் திமுக அரசுதான். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். மாநிலத்தில் எங்கள் NDA கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், விவசாயிகளின் மரியாதையை மீட்டெடுக்கவும், அவர்களை வலுவூட்டவும் நாங்கள் பணியாற்றுவோம். முதலமைச்சரும் அவரது மகனும் சனாதன மரபுகளை அவமதிக்கும் விதத்தைக் கண்டு ஒட்டுமொத்த நாடும் தலைகுனிகிறது. எங்கள் கடவுள்களுக்கு இழைக்கப்படும் இந்த அவமதிப்பை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்' என்று அவர் தெரிவித்தார்.
பாஜகவின் நிதின் நபின், தமிழ்நாட்டின் கந்தர்வக்கோட்டையில் ஒரு ரோட் ஷோ நடத்தினார். மேலும் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நபின், மீனாட்சி அம்மனைத் தரிசிப்பது 'தனித்துவமான வலிமையையும் ஆற்றலையும்' அளிப்பதாகக் கூறினார். மேலும், இந்தியாவின் ஆன்மீக மரபுகள் தொடர்ந்து சிந்தனைகள், கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும், அனைத்துக் குடிமக்களுக்கும் வளம் பெருக வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'மீனாட்சி அம்மனைத் தரிசிப்பது, குறிப்பாக இந்திய வரலாற்றில் அக்கோவில் கொண்டுள்ள தனித்துவமான இடத்தைக் கருத்தில் கொள்ளும்போது, நிச்சயமாக ஒரு தனித்துவமான வலிமையையும் ஆற்றலையும் வழங்குகிறது. நமது இந்து தெய்வங்களுக்குரிய இடம் நமது சிந்தனைகளிலும், நமது கொள்கைகளிலும், நமது செயல்களிலும் பிரதிபலிக்கிறது.' என்று அவர் தெரிவித்தார்.
'தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும், அவர்களது இல்லங்களில் நல்வாய்ப்பும் வளமும் பெருக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முன்னோக்கிச் செல்வதற்கான நமது ஆன்மீக உறுதியைத் தூண்டும் வகையிலான அம்சங்களை நமது வரலாறு தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் இந்தியர்கள் பெருமை கொள்கிறார்கள்,' என்று அவர் மேலும் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகியவற்றை உள்ளடக்கிய, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும் (SPA), அஇஅதிமுக தலைமையில், பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி (PMK) ஆகியவற்றைத் தனது கூட்டணிக் கட்சிகளாகக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) இடையேதான் முக்கியப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணிக்களுக்கு இடையில், முதல் முறையாக முக்கிய தேர்தல் களத்தில் தனது பலத்தை பரிசோதிக்க நடிகர் விஜயும் முழு முனைப்புடன் முயற்சித்து வருகிறார். அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீரான வாக்கு வங்கியைக் கொண்டிருக்க்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் மீதும் அதிக கவனம் உள்ளது. இந்த கட்சிகளும் வக்கு சதவிகிதத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!