கமல்ஹாசன் திமுக தலைமையிலான கூட்டணிக்காக தனது சூறாவளி பிரச்சாரத்தை வரும் ஏப்ரல் 17ம் தேதி முதல் தொடங்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், திமுக தலைமையிலான கூட்டணிக்காக தனது சூறாவளி பிரச்சாரத்தை வரும் ஏப்ரல் 17ம் தேதி முதல் தொடங்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டார். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மநீம அங்கம் வகிக்கிறது. தொடக்கத்தில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அவர்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக தலைமை வலியுறுத்தியதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன. ஆனால், தங்களது தனித்துவமான டார்ச் லைட் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவது என்பதில் மநீம உறுதியாக இருந்தது. தொடர்ச்சியான பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, ஒரு அதிரடி முடிவை கமல்ஹாசன் அறிவித்தார்.
"2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடாது; மாறாக, பாசிச சக்திகளை வீழ்த்துவதற்காக திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவோம். இது தியாகம் அல்ல, தமிழ்நாட்டிற்கான எனது கடமை" என்று அவர் அறிக்கை வெளியிட்டார். கமல்ஹாசனின் இந்த முதிர்ச்சியான அரசியல் முடிவை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வெகுவாக பாராட்டினர். கட்சியின் தொண்டர்கள் மத்தியில் சிறு அதிருப்தி இருந்தாலும், பாசிச எதிர்ப்பு என்ற ஒற்றை இலக்கில் அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர் .
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 20 வரை என நான்கு நாட்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் கமல்ஹாசன். இதற்கான விரிவான சுற்றுப்பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது/
முதல் நாள் (ஏப்ரல் 17 - சென்னை): பிரச்சாரத்தின் முதல் நாளான ஏப்ரல் 17 அன்று சென்னையில் தனது பயணத்தை தொடங்கும் கமல், வடசென்னை மற்றும் மத்திய சென்னைக்குட்பட்ட கொளத்தூர், துறைமுகம், பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இரண்டாம் நாள் (ஏப்ரல் 18 - சென்னை): தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னையின் முக்கிய பகுதிகளான திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பரப்புரை மேற்கொள்கிறார்.
மூன்றாம் நாள் (ஏப்ரல் 19 - கொங்கு மண்டலம்): ஏப்ரல் 19 அன்று கொங்கு மண்டலத்திற்கு செல்லும் அவர், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அவினாசி மற்றும் கடந்த முறை அவர் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்யவுள்ளார்.
நான்காம் நாள் (ஏப்ரல் 20 - டெல்டா மற்றும் திருச்சி): பிரச்சாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 20 அன்று, தமிழகத்தின் மைய பகுதியான திருச்சிராப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு திருச்சி கிழக்கு, திருவரங்கம் மற்றும் லால்குடி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணிக்காகப் பிரம்மாண்டப் பொதுக்கூட்டங்கள் மற்றும் வீதிப் பிரச்சாரங்களில் பங்கேற்கிறார்.
கமல்ஹாசனின் இந்த பிரச்சாரப் பட்டியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இரண்டு தொகுதிகள் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு. காரணம், இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் தான் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் நேரடியாக களமிறங்கி போட்டியிடுகிறார். சினிமா உலகில் பல தசாப்தங்களாக முடிசூடா மன்னனாக விளங்கும் கமல்ஹாசன், தனக்கு பின்னால் வந்த தலைமுறை நடிகரான விஜய்க்கு எதிராக, அதுவும் அவர் போட்டியிடும் சொந்த தொகுதிகளுக்கே சென்று திமுக கூட்டணிக்காக வாக்கு சேகரிக்கவுள்ளது அரசியல் நோக்கர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக ஆளுங்கட்சியான திமுகவை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜய். இந்த நிலையில், விஜய்யின் அரசியல் கொள்கைகள், அவரது கட்சியின் நிலைப்பாடு மற்றும் திமுக மீதான அவரது விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தின் மூலம் என்ன மாதிரியான பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பார்க்க ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், கமல்ஹாசனின் இந்த என்ட்ரி திமுக கூட்டணிக்கு மாபெரும் நட்சத்திர பலத்தை கொடுக்கும் என ஆளுங்கட்சி வட்டாரங்கள் முழுமையாக நம்புகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ