TN Budget 2025: 2025-2026 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை மார்ச் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இச்சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முந்தைய நாளான இன்று (மார்ச் 13) பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடுவது வழக்கம். அதேபோல் தமிழக அரசும் முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
பட்ஜெட்டில் இலச்சினை மாற்றம்
அதேபோல் தமிழக பட்ஜெட் தொடர்பாக 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற வீடியோ ஒன்றையும் தமிழக முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரூபாய் குறியீடான ₹-க்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக பட்ஜெட்டின் லோகோ-வாகவும் தமிழ் எழுத்தான 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மும்மொழி கொள்கை, தேசிய கல்வி கொள்கை விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் குறியீட்டை தமிழக முதலமைச்சர் மாற்றி உள்ளது இந்திய அரசியல் களத்தில் பேசும்பொருளாக மாறி உள்ளது. இந்தி திணிப்பு விவகாரம் உச்சம் பெற்றுள்ள நிலையில், அதனை தவிர்க்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து இலச்சினை மாற்றி உள்ளார்.
மேலும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2 முக்கிய அறிவிப்புகள்..!
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட.. என திரவிட மாடல் மற்றும் தமிழ்நாடு பட்ஜெட் 2025 என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டுள்ளார். தமிழக அரசு பொருளாதார ஆய்வறிக்கையில் ₹-க்கு பதிலாக ரூ என்ற தமிழ் எழுத்தை மாற்றம் செய்ததற்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் இவ்வளவு முட்டாளா?
அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை எக்ஸ் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர், 2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றுகிறது. இது முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.
இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீங்கள் எவ்வளவு முட்டாள் ஆக முடியும்? என பதிவிட்டுள்ளார்.









