காஞ்சிபுரத்தில் சியட் டயர் நிறுவன தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் தொழிற்சாலை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கு ஏற்றி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்.  4000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  புதிய தொழிற்சாலை மூலம் 1,000 பேருக்கு நேரடியாகவும், 10,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் தமிழக அரசு, உலக முதலீட்டாளர் மாநாடு, முதல்வர், துணை முதல்வரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் முதலீடுகளை திரட்டி வருகிறது.


இந்த வகையில் தமிழக அரசின் தொழில் துறைக்கும் பிரபல சியட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2018ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தில், சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 


இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் கூறுகையில்... டயர் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் டயர் உற்பத்தியில் 40% தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது என்றும், சைக்கிள் டயர் முதல் போர் விமானங்களின் டயர் வரையிலும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.