)
TN education Department circular : இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியிடங்கள்:
மாணவர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர் பணியிடங்களை எவ்வாறு நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்தச் சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள். 61 முதல் 90 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள். 91 முதல் 120 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள். 121 முதல் 200 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள். 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால், அது ஒரு பிரிவாகக் கருதப்பட்டு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார். மாணவர் எண்ணிக்கை 50-க்கு அதிகமாக இருந்தால், அந்த வகுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 150-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், ஒவ்வொரு பாடத்திற்கும் ஒருவர் வீதம் 6 ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் தலா 40 மாணவர் இருந்தால் (1:40), அது ஒரு பிரிவாகக் கருதப்படும். ஒரு குறிப்பிட்ட வகுப்பில் 60-க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால், அந்த வகுப்பை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணிநேரம் மற்றும் மாறுதல்:
பணியிடங்களை நிர்ணயம் செய்யும்போது, ஒரு ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகள் ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளைகள் குறைவாக உள்ள ஆசிரியர்களை, கீழ்நிலை வகுப்புக்கு மாற்றுவது தவிர்க்கப்பட்டு, அருகிலுள்ள வேறு பள்ளிக்கு மாற்றுப் பணியில் அனுப்பலாம்.
ஆங்கில வழிக்கல்வி மற்றும் பிற வழிகாட்டுதல்கள்:
ஆங்கில வழிக்கல்விப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். 15-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், அவர்களை அருகிலுள்ள வேறு பள்ளியில் உள்ள ஆங்கில வழிப் பிரிவில் சேர்க்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், கூடுதல் தேவைப்படும் பணியிடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட விவரங்களை, வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ