)
பள்ளி மாணவிகளின் உடல், மன மற்றும் சமூக நலனை பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, தமிழ்நாடு அரசு "அகல் விளக்கு" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக, இணைய உலகம் மற்றும் சமூக ஊடகங்களால் ஏற்படும் அபாயங்களில் இருந்து மாணவிகளை காப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டம், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியால் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

அகல் விளக்கு திட்டத்தின் நோக்கம் என்ன?
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள், எவ்வித இடையூறும் இன்றி தங்கள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதே 'அகல் விளக்கு' திட்டத்தின் தலையாய குறிக்கோளாகும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மாணவிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இணையவழி கொடுமை (Cyberbullying), சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பிற இணையதள அபாயங்களில் இருந்து அவர்களை பாதுகாத்து, அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காகவே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படும் விதம்!
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், ஆசிரியைகளை கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுக்கள், மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கும். ஒவ்வொரு பள்ளியிலும் அனுபவமிக்க பெண் ஆசிரியர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்படும். இணையதளத்தை பாதுகாப்பாக கையாள்வது, மன நலனை பேணுவது மற்றும் சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்வது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறைகள் அடங்கிய ஒரு பிரத்யேக கையேடும் வழங்கப்படும்.
அரசு ஒதுக்கியுள்ள நிதி
மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான இந்த முக்கியத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம், மாணவிகள் எந்தவிதமான இடர்பாடுகளும் இல்லாமல், நம்பிக்கையுடன் பள்ளிக்கு வந்து தங்கள் கல்வியை தொடர உதவும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் என அரசு நம்புகிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "பெண் குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. சமூக ஊடகங்களில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டு கவலைப்பட தேவையில்லை, அதிலிருந்து மீண்டு வர முடியும். பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோரும், ஆசிரியர்களும் கண்காணித்து தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ