)
மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்த்து, சுயசார்பு வாழ்க்கையை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் சிறப்பு திட்டங்களில் மிகவும் முக்கியமானது, "மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்" ஆகும். தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரத்தை இலவசமாக வழங்குவதன் மூலம், அவர்கள் சுயதொழில் செய்து, நிலையான வருமானம் ஈட்ட வழிவகுப்பதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இது, அவர்கள் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், தங்கள் சொந்த காலில் நிற்க உதவுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் மட்டுமின்றி, அதனுடன் ஊசிகள், பாபின்கள் மற்றும் நூல்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பொது இடங்களுக்கு வேலைக்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீட்டில் இருந்தபடியே தையல் தொழில் செய்து வருமானம் ஈட்டலாம். இது, ஏழை குடும்பங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, தினசரி நிதி பிரச்சினைகளிலிருந்து ஒரு பாதுகாப்பை வழங்குகிறது. தங்களது சொந்த திறமையின் மூலம் வருமானம் ஈட்டுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கையை அளிப்பதோடு, சமூகத்தில் அவர்களுக்கென ஒரு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கவும் உதவுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற, கீழ்க்காணும் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 6 மாத கால தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசு பணியில் இருக்க கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அல்லது தனித்துவமான அடையாள அட்டை மற்றும் அதற்கான மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம். அருகில் உள்ள பொது சேவை மையம் மூலம், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அப்படி இல்லை என்றால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தகுதியான பயனாளிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, அவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இலவசமாக மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அல்லது UDID அட்டை இருப்பது கட்டாயம் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ