தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எந்த எந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க திட்டம் அதிவிரைவுச்சாலை ஆகும். இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லக்கூடிய நேரம் வெகுமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் பல்வேறும் மாவட்டங்களை விரைவுச்சாலைகள் இணைக்கிறது. இது போக்குவரத்தை மக்களுக்கு எளிதாக்கி வருகிறது. ஆனால் இந்த சாலை பராமரிப்பிற்காக வசூலிக்கப்படும் டோல் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சுங்கக்கட்டண உயர்வுகள் மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, சென்னையிலிருந்து மதுரைக்கு பயணம் செய்பவர்களுக்கு சுங்கக்கட்டணமாக மட்டும் 600 முதல் 1000 ரூபாய் வரை செலவாகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 78 சாவடிகளில் கட்டணம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுமார் 40 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஒரு டோல் கேட்டில் ரூ.5 முதல் ரூ.75 வரை கட்டண உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னை அருகில் உள்ள வானகரம், செங்கல்பட்டு, திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு போன்ற சுங்க சாவடிகளில் அடுத்த மாதம் முதலும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதற்கு பலரும் கட்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.
அன்புமணி கண்டனம்
சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களை மேலும் பாதிக்கும் ப வகையில் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது நியாயமற்றதாகும். 2008-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல் விதிகளின் அடிப்படையில் தான் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறி வரும் போதிலும், சுங்கக்கட்டணத்தை உயர்த்த எந்தவிதமான நியாயமும் இல்லை.
எந்த ஒரு கட்டமைப்பின் பயன்பாட்டுக்கான கட்டணமும் அதன் வரவு & செலவு மற்றும் லாப & நட்டக் கணக்குகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும், அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் அறமோ, நியாயமோ அல்ல. ஒவ்வொரு சுங்கச்சாவடியையும் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடக்கின்றன? அவற்றின் மூலம் எவ்வளவு ரூபாய் கட்டணம் வசூலாகியிருக்கிறது என்பதை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், எந்த பயனும் ஏற்படவில்லை.
கடந்த காலங்களில் இல்லாத வகையில் 2023 & 24ஆம் ஆண்டில் சுங்கக்கட்டண வசூல் 35% உயர்ந்து ரூ.64 ஆயிரத்து 810 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2019 & 20ஆம் ஆண்டில் ரூ.27,503 கோடியாக இருந்த சுங்கக்கட்டண வசூல், கடந்த 4 ஆண்டுகளில் 135% அதிகரித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து உயர்த்தி வருவது அநீதியாகும். எனவே, புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ