)
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும் என்பது பலரது விருப்பமான ஒன்று. வேலையை மறந்து 2 முதல் 3 நாட்கள் அங்கு சென்று ஓய்வு எடுத்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்ப வேண்டும் என்று நண்பர்கள் முதல் குடும்பத்தினர் வரை திட்டமிடுவது வழக்கம். ஆனால் கொடைக்கானலில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அங்குள்ள கூட்ட நெரிசல் தான். இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சென்னை ஐஐடி நிபுணர் குழு ஒரு முக்கிய பரிந்துரையை வழங்கியுள்ளது. இதன்படி, கொடைக்கானல் மலைப்பாதையில் தினமும் 3,000 முதல் 3,500 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பதால் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இங்கு குவிகின்றன. தற்போது, சராசரியாக ஒரு நாளைக்கு 5,000 முதல் 8,000 வாகனங்கள் வரை கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றன. குறுகலான மலைப்பாதைகளில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்வதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர கால வாகனங்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதுதவிர, அதிகப்படியான வாகன புகையால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு, சாலைகளும் சேதமடைகின்றன.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், சென்னை ஐஐடி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் முக்கியமானது, தினசரி வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதாகும். ஒரு நாளைக்கு 3,000 முதல் 3,500 வாகனங்களை மட்டுமே மலைப்பாதையில் அனுமதிக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தினால், போக்குவரத்து நெரிசல் இன்றி சீராக இயங்கும் என்றும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையால் சாலைகள் சேதமடைவது குறைந்து, சுற்றுசூழல் பாதிப்பும் தடுக்கப்படும்.
வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, ஆன்லைன் வாகன அனுமதி முறை கொண்டு வரப்படலாம். மேலும், கொடைக்கானலில் வாகன நிறுத்துமிடங்களை விரிவாக்கம் செய்வது, பொது போக்குவரத்தை அதிகரிப்பது போன்ற கூடுதல் நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருகின்றனர். ஐஐடியின் இந்த பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். விபத்துகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. சுற்றுலா பயணிகள் மன அழுத்தமின்றி தங்கள் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். இருப்பினும், வாகன எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால், சில சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலும் ஏற்படலாம். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், கொடைக்கானல் சுற்றுலாவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ