)
TTDC East West 8 Days Tour Plan: சுற்றுலாப் பயணம் என்பது திட்டமிடப்பட்டதாக இருந்தால் நிச்சயம் பெரியளவில் சிரமம் இல்லாமல் பல்வேறு இடங்களை ரசிக்கலாம். இருப்பினும் சுற்றுலா செல்வதற்கு கடும் சிரத்தை எடுக்க வேண்டும். எத்தனை பேர், எந்தெந்த ஊர்களுக்கு, எத்தனை நாள்களில் சென்று வர வேண்டும் என்பதில் தொடங்கி எதில் போவது, எங்கு தங்குவது, சாப்பாட்டுக்கு என்ன செய்வது என பல விஷயங்களை முன்னரே திட்டமிட வேண்டும்.
இதனாலேயே பலரும் சுற்றுலாவை ஒருங்கிணைப்பவர்களிடம் தங்களின் திட்டத்தை ஒப்படைத்துவிடுவார்கள். அந்த சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் இன்பச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலாக்களை ஒருங்கிணைக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் இணைந்துக்கொள்ளலாம்.
அந்த வகையில், தற்போது 8 நாள்கள் கிழக்கு மேற்கு சுற்றுலா என்ற பிளானை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் தொடங்கி திருவண்ணாமலை, ஏற்காடு, முதுமலை, கோயம்புத்தூர், குருவாயூர், காலடி, கொச்சி, ஆழப்புழா, திருவனந்தபுரம், குமரகோம், கோட்டயம், மூணார், பழனி, திருச்சி ஆகிய இடங்களை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்.
இந்த 8 நாள்கள் சுற்றுலாவில் பல கலாச்சார சார்ந்த இடங்களுக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் மற்றும் இடங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், வனப்பகுதிகளுக்கு செல்வீர்கள். சென்னையில் ஒரு புதன்கிழமை காலை 7 மணிக்கு புறப்பட்டால் அடுத்த வாரம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மீண்டும் சென்னை வரும் வகையில் இந்த 8 நாள் சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து புதன்கிழமை காலை 7 மணிக்கு பேருந்தில் புறப்படலாம். அங்கிருந்து செல்லும் வழியில் காலை உணவு அருந்தலாம். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு திருவண்ணாமலை சென்று அங்கு மதிய சாப்பாடு உண்ணலாம். அங்கிருந்து ஏற்காட்டிற்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஏற்காட்டுக்குச் செல்லலாம். ஏற்காட்டில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் தங்கிக்கொண்டு இரவு ஓய்வு எடுக்கலாம். இரவு உணவும் அங்கேயே தான்.
வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு Ladies Seat, Gents Seat, Rose Garden பகுதிகளுக்கு செல்வது. பிற்பகல் 11.30 மணிக்கு அங்குள்ள ஏரியில் போட்டிங் செல்லலாம். மதியம் 1.30 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும் வழியில் மதிய உணவை சாப்பிடலாம். மாலை 4.30 மணிக்கு மருதமலை சென்று கோவிலில் வழிபட்ட பின்னர் மீண்டும் கோவை திரும்புகிறோம். அங்கு ஹோட்டல் தமிழ்நாட்டில் தங்கும் வசதி மற்றும் உணவு கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலம் குருவாயூர் செல்லலாம். அங்கு காலை 10.30 மணிக்கு குருவாயூர் கோவிலில் தரிசனத்திற்கு செல்லலாம். மதியம் 2.30 மணிக்கு குருவாயூர் யானைகள் காப்பகம் செல்லலாம். மாலை 4.30 மணிக்கு காலடியில் ஆதி சங்கராச்சாரியாரின் பிறப்பிடத்திற்கு செல்லலாம். இரவு 8.30 மணிக்கு கொச்சி சென்று அங்கு இரவு உணவை முடித்து அங்கேயே தங்கலாம்.
சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொச்சின் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு காலை உணவு சாப்பிட்டு போட்டிங் செல்லலாம். அங்கிருந்து ஆழப்புழா புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு மதிய உணவுக்கு பின் ஆழப்புழா ஹவுஸ் போட்டுக்கு செல்லலாம். அதை முடித்துவிட்டு திருவனந்தபுரம் புறப்படலாம். இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையலாம். அங்கு இரவு சாப்பிட்டு தங்கிக் கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு காலை உணவை முடித்துவிட்டு, பத்மநாபசுவாமி கோவிலுக்கு செல்லலாம். அங்கு தரிசனம் முடித்து கோட்டயம் புறப்படலாம். மதியம் 1.30 மணிக்கு கோட்டயத்தில் மதிய உணவை சாப்பிட்டு குமரகோம் செல்லலாம். மதியம் 3 மணிக்கு குமரகோம் போட்டிங் மற்றும் மசாஜ் சென்டர் செல்லலாம். அங்கு நேரம் செலவிட்டு அங்கிருந்து கிளம்பினால் இரவு 8 மணிக்கு மீண்டும் கோட்டயம் வந்து அங்கு இரவு உணவை முடித்து தங்கிக்கொள்ளலாம்.
திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு காலை உணவை முடித்து முணார் நோக்கி புறப்படலாம். அங்கு ஹோரல் கார்டனை சுற்றிப் பார்த்துவிட்டு மதியம் 2.30 மணிக்கு உணவை முடித்து மற்ற இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மதியம் 3.30 மணிக்கு போட்டிங் செல்லலாம். அதன்பின் மாலை 5 மணிக்கு மாட்டுப்பட்டி அணை மற்றும் எக்கோ பாயிண்டுக்கு செல்லலாம். இரவு 8 மணிக்கு மூணாரில் தங்கி இரவு உணவை முடிக்கலாம், அங்கேயே தங்கலாம்.
செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு பழனி நோக்கி புறப்படலாம். மதியம் 1 மணிக்கு பழனி சென்று அங்கு கோயிலில் தரிசனம் மேற்கொள்ளலாம். அங்கிருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு இரவு உணவை முடித்து திருச்சியில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் தங்கிக்கொள்ளலாம்.
புதன்கிழமை காலை 9.30 மணிக்கு திருச்சியில் காலை உணவை சாப்பிட்டு மலைக்கோட்டைக்கு செல்லலாம். பின்னர் அங்கிருந்து சென்னை நோக்கி புறப்படலாம். வரும் வழியில் மதியம் 1 மணிக்கு திண்டிவனத்தில் மதிய உணவை சாப்பிடலாம். அன்று மாலை 6 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்திற்கு வந்துவிடலாம்.
இதுவே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அளிக்கும் 8 நாள்கள் சுற்றுலா திட்டமாகும். இந்த சுற்றுலாவுக்கு ஒரு பயணிக்கு ரூ.15 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் தங்குமிட வசதி, பேருந்து வசதி, சுற்றுலா வழிகாட்டு ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது. ஆனால், உணவும் இதில் அடங்குமா என்பது குறித்து இணையதளத்தில் விவரம் ஏதும் கொடுக்கப்படவில்லை.
எனவே, விருப்பமுள்ளவர்கள் சென்னை வாலாஜா சாலையில் உள்ள, கலைவாணர் அரங்கிற்கு அருகில் இருக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளாகத்திற்கு நேரில் சென்றும் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை எழுப்பி மேற்கொண்டு வேண்டுமென்றால் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம். 044-25333333, 044-25333857, 044-25333444 இந்த அலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் சந்தேகங்களை கேட்கலாம். 1800 4253 1111 என்ற இலவச எண்ணும் TTDC இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. support@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் தொடர்புகொள்ளலாம். சுற்றுலாவுக்கான தேதியை TTDC இறுதி செய்து உங்களிடம் தகவல் தெரிவிப்பார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ