)
TVK Cabinet Ministers: தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இன்றைய (மே 10) நாள் மிகவும் முக்கியமான நாளாகும். முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர் பதவியேற்க இருக்கிறார். சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டிற்கு இது பெருமைமிகு தருணமாக பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச. ஜோசப் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டு, ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொள்ள இருக்கிறார்.
கடந்த மே 4ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. தமிழகம் முழுவதும் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தவெக, 108 தொகுதிகளை கைப்பற்றியது. இதன்மூலம், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இல்லாமல் இருந்தது.
இதனால், மே 4ஆம் தேதி முதல், கடந்த ஆறு நாள்களாக தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே இருந்தது. விஜய்யின் தவெகவுக்கு திமுக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்த காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியினருக்கு தவெக அமைச்சரவையில் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மறுபக்கம், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு என்றும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் முடிவை ஏற்கும் வகையிலும், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதாலும், குடியரசு தலைவர் ஆட்சி மூலம் மத்திய பாஜகவின் ஆளுகை தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், தங்களால் விஜய் ஆட்சியமைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதாலும் விஜய்யின் தவெகவை ஆதரித்திருப்பதாக விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஒத்த கருத்துடன் தெரிவித்துள்ளன.
இந்தச் சூழலில், இன்று விஜய்யுடன் பதவியேற்க இருக்கும் அமைச்சர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
| அமைச்சர் பெயர் | இலாக்கா |
| செங்கோட்டையன் | பொதுப்பணித்துறை |
| சி.டி.ஆர். நிர்மல் குமார் | மின்சார துறை |
| என். ஆனந்த் | நகராட்சி நிர்வாகத்துறை |
| வெங்கட ரமணன் | பள்ளிக்கல்வித்துறை |
| அருண் ராஜ் | வணிக வரித்துறை |
| ஆதவ் அர்ஜூனா | விளையாட்டு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை |
| முஸ்தபா | சிறுபான்மையினர் நலத்துறை |
இவர்களுடன் ஒரு மகளிரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் இரண்டு பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற விஸ்வநாதனுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவர் பொதுத் தொகுதியில் போட்டியிட்ட வென்ற பட்டியலினத்தவர் என்பது கூடுதல் சிறப்பு. இவருடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கும் அமைச்சரவையில் இடம் என கூறப்படுகிறது.
விஜய் உள்பட மொத்தம் 11 பேர் இன்று பதவியேற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இவை எதுவும் உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் இல்லை. தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்படவில்லை.
இன்னும் அமைச்சரவையே பதவியேற்காத நிலையில், தவெகவுக்கு சில கண்டனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அதுவும் நேற்று (மே 9) தான் தவெகவுக்கு தனது ஆதரவு கடிதத்தை வழங்கிய விசிக தரப்பில் இருந்து, அமைச்சரவை குறித்த விமர்சனம் எழுந்துள்ளது.
விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் அவரது X பக்கத்தில், நேற்றிரவு 11.10 போட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சராகும் ஜோசப் விஜய் அவர்களுக்கும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்போருக்கும் வாழ்த்துகள்" என வாழ்த்து தெரிவித்துவிட்டு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அந்த பதிவில், "கடந்த திமுக ஆட்சியில் கோவி செழியன், அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து வந்தவர்களின் கைகளில் அத்துறை இருப்பதே நன்று. தவெக அமைச்சரவையிலும் அந்நிலை தொடர வேண்டும்" என ஆளுர் ஷா நவாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராகும் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்போருக்கும் வாழ்த்துகள்.
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) May 9, 2026
கடந்த திமுக ஆட்சியில் திரு.கோவி செழியன், திரு.அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து…
அதாவது, தவெகவின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வெங்கட ரமணன் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அவர் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆளுர் ஷா நவாஸ் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, 'தமிழ்நாட்டில் பிராமணிய எதிர்ப்பு கொள்கை காலாவதியாகவிட்டது' என வெங்கட ரமணன் முன்பு ஒருமுறை பேட்டி அளித்திருந்ததும் திராவிட இயக்க ஆதரவாளர்களின் விமர்சனங்களுக்கு காரணமாகும்.
மேலும் ஆளுர் ஷா நவாஸ் அந்த பதிவில், "தமிழ்நாட்டின் கல்வி வரலாறும் அரசியல் வரலாறும் வேறு வேறல்ல. கல்வியே நம் அரசியல். கல்விக்காகவே நம் அரசியல்" என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். பல்வேறு திராவிட இயக்க ஆதரவாளர்கள், திமுக ஆதரவு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வெங்கட்ராமனை தேர்வு செய்யக்கூடாது என கோரிக்கை வைத்து வருகின்றனர். தவெகவின் பொருளாளரான வெங்கட ரமணன், சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.