)
Tamil Nadu CM Vijay: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படுகிறது. இதனால், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
கடந்த மூன்று நாட்களாக தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு கூறி உள்ளனர். இதனை அடுத்து, தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேக்கர் உத்தரவிட்டார். இதனை அடுத்து, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
ஜோசப் விஜய் எனும் நான் என்று கூறி, விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். விஜய் பதவியேற்றபோது, அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆனந்த கண்ணீரில் இருந்தனர். கட்சி தொடங்கிய 828 நாட்களில் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று கூறி பதவியேற்றார் விஜய். விஜய்யுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
#WATCH | Chennai: Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar administered the oath of office to Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay as the Tamil Nadu Chief Minister, at the Jawaharlal Nehru Stadium in Chennai. pic.twitter.com/ZWqm6tu8xH
— ANI (@ANI) May 10, 2026
விஜயை தொடர்ந்து, 9 பேர் தவெக தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, வில்லிவாக்கம் எம்எல்ஏ ஆதவ் அர்ஜுனா, கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன், எழும்பூர் எம்எல்ஏ ராஜ்மோகன், சிவகங்கை எம்எல்ஏ கீர்த்தனா, தி.நகர் எம்எல்ஏ ஆனந்த், அருண்ராஜ், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ நிர்மல் குமார், காரைக்குடி எம்எல்ஏ பிரபு, மயிலாப்பூர் எம்எல்ஏ வெங்கட ரமணன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
| செங்கோட்டையன் | பொதுப்பணித்துறை |
| ஆனந்த் | நகராட்சி நிர்வாகத்துறை |
| வெங்கடரமணன் | பள்ளிக்கல்வித்துறை |
| அருண் ராஜ் | வணிக வரித்துறை |
| ஆதவ் அர்ஜுனா | விளையாட்டு, மதுவிலக்கு, ஆயுத்தீர்வைத் துறை |
| பிரபு | சுகாதாரத்துறை |
| கீர்த்தனா | சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை |
| ராஜ்மோகன் | ஆதிதிராவிடர் நலத்துறை |
| நிர்மல் குமார் | மின்சாரத்துறை |
முதல்வராக பதவியேற்ற விஜய் விழா மேடையில் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ”நான் ஒன்றும் மன்னர் பரம்புரையில் இருந்து வந்தவன் அல்ல. ஒரு உதவி இயக்குநரின் மகனாக என் வாழ்க்கையை தொடங்கி இன்று இங்கு நிற்கிறேன். சினிமாவில் எனக்கு மிகப்பெரிய ஒரு இடத்தை நீங்கள் தான் கொடுத்தீர்கள். உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்த என்னை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டீர்கள். எனக்கு எவ்வளவோ அவமானங்கள், கஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் உங்கள் கஷ்டங்களாக எடுத்துக் கொண்டீர்கள். நான் ஒன்றும் தேவத்தூதன் அல்ல. சாதாரண ஒரு வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உறுதி வருகிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய விஜய், ”இன்ற தமிழக அரசு இருக்கும் நிலைமை குறித்து உங்களிடம் தெரிவிக்க வேண்டும். முன்பு இருந்த அரசு கஜானாவை சுத்தமாக காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். தமிழக அரசின் தற்போதைய நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். சட்டம் ஒழுங்கு மற்றும் அனைவருக்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன். மருத்துதுவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் தான் முழு கவனம் செலுத்துவேன். வெற்றி பெற்று விட்டோம் என ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள்” என்று கூறினார்.
பதவியேற்பு விழா மேடையிலேயே முதல்வர் விஜய் இரண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கு 200 யூனிட் வரை கட்டணமிலலா மின்சாரம் வழங்கும் கோப்பில் விஜய் கையெழுத்திட்டார். மாதம் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உருவாக்கம், போதைப் பொருள் தடுப்பு படை உருவாக்கம் கோப்புகளிலும் விஜய் கையெழுத்திட்டார்.