)
கடந்த நான்கு நாட்களாக உச்சக்கட்ட பரபரப்பில் இருந்த தமிழக அரசியல் களம் தற்போது ஒரு தெளிவான முடிவிற்கு வந்துள்ளது. தவெக-விற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்குமா, அளிக்காதா என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், தற்போது விஜய்க்கு தங்களது நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதன்படி, 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளன. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை பெற்றுள்ளது. எனவே, விஜய் முதலமைச்சராக பதவியேற்க இனி எந்தவொரு சிக்கலும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே தங்களது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் எந்த முடிவும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்ந்து நீடிப்போம். ஆனால், மாநிலத்தில் கவர்னர் ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காகவும், ஜனநாயகத்தை காக்கவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எங்கள் ஆதரவை அளிக்கிறோம். விசிக தரப்பிலிருந்து எந்தவித நிபந்தனையும் வைக்கப்படவில்லை; இது நிபந்தனையற்ற ஆதரவு" என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
#BreakingNews | நிபந்தனையற்ற ஆதரவு!#ZeeTamilNews | #TVK | #VCK | #BreakingNews pic.twitter.com/q3DbyFjNiR
— Zee Tamil News (@ZeeTamilNews) May 9, 2026
முன்னதாக, கடந்த 8ம் தேதியே விஜய் முதலமைச்சராக பதவியேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், விஜய்க்குப் போதுமான பெரும்பான்மை இல்லை என்று கூறி, ஆளுநர் தரப்பில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க சம்மதம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை ஆளுநரை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், தற்போது 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்டுள்ளார். எனினும், ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை இன்று மாலைக்குள் ஆளுநரை விஜய் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினால், வரும் திங்கட்கிழமை அவர் முதல்வராக பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது. சந்திக்க தாமதமானால், பதவியேற்பு விழா அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.
| தவெக | 107 |
| காங்கிரஸ் | 5 |
| சிபிஐ | 2 |
| சிபிஎம் | 2 |
| விசிக | 2 |
| ஐயூஎம்எல் | 2 |
| மொத்தம் | 120 |
தேர்தலில் தனித்து போட்டியிட்ட விஜய்க்கு, தற்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன. இதனால், இந்த ஆதரவு கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரப் பங்கை தமிழக வெற்றிக் கழகம் வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்ற முடிவில் உறுதியாக இருப்பதால், அவர்களுக்கு நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்பது விஜய் முழுமையாக பொறுப்பேற்ற பின்புதான் தெரியவரும். எது எப்படியோ, புதிய அரசு அமையும் வரை அடுத்த சில தினங்களுக்கும் தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
1. தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளதா?
ஆம், தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், ஜனநாயகத்தைக் காக்கவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2. விசிக தனது ஆதரவுக்கு ஏதேனும் நிபந்தனைகளை விதித்துள்ளதா?
இல்லை, விசிக எந்தவிதமான நிபந்தனைகளையும் தவெக-விற்கு விதிக்கவில்லை. இது முற்றிலும் நிபந்தனையற்ற ஆதரவு எனத் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
3. விஜய் எப்போது தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்?
ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் பெரும்பான்மை தற்போது கிடைத்துவிட்டதால், ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோருவார். எல்லாம் சுமுகமாக நடந்தால், வருகிற திங்கட்கிழமை விஜய் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது.
4. விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டணிக் கட்சிகள் எவை?
தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தற்போது காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.
5. ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா?
ஆட்சியில் பங்கு கேட்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளதால், அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசிக மற்றும் இதர கட்சிகளுக்கு இடமளிக்கப்படுமா என்பது விஜய் பொறுப்பேற்ற பின்னரே தெரியவரும்.