)
சென்னை ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டம் நடத்தக்கூடாது, வேறு எங்கேனும் அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் போராட்டத்தை நடத்திக்கொள்ளலாம் என்றும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே இருக்கும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களை கைது செய்தனர். இந்த நிலையில், தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக விஜய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!
குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை? அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்? அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ