)
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போது இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. திமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வரும் விஜய், திடீரென எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்திய பிறகு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் விஜய், தனது பிரச்சாரங்களில் ஆளும் திமுக அரசையும், முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, மறைந்த முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில், திமுக அரசை மிக கடுமையாக அவர் தாக்கி பேசினார். இவ்வாறு திமுக மீது கடும் கோபத்தில் இருக்கும் விஜய், அதிமுக பொதுச்செயலாளருடன் பேசியதாக கூறப்படுவது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஆரம்பத்தில், தனது பிரச்சாரங்களில் திமுக மற்றும் பாஜகவை மட்டுமே விஜய் குறிவைத்து வந்தார். அதிமுகவை அவர் விமர்சிக்காததால், இரு கட்சிகளுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக பேசப்பட்டது. ஆனால், மதுரை மாநாட்டில், எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி இன்று பாஜகவிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது என்று மறைமுகமாக அதிமுகவை விமர்சித்தார். மேலும், பாசிச பாஜக மற்றும் அதனுடன் தொடர்பில் இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த சூழலில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் போன்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க அமித்ஷா வலியுறுத்தியதாகவும், இதனால் பாஜக மீது எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அதிருப்தியின் காரணமாகவே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெகவுடன் கூட்டணி அமைக்க அவர் முயற்சிப்பதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
திமுகவை வீழ்த்த விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்தால் ஒரு வலுவான கூட்டணி உருவாகும் என்பது பலரின் கணிப்பாக உள்ளது. இந்த திடீர் அரசியல் திருப்பம், திமுக மற்றும் பாஜக முகாம்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த தொலைபேசி உரையாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இது உண்மையாகும் பட்சத்தில், தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் களம் முற்றிலும் புதிய பரிமாணத்தை எட்டும் என்பது மட்டும் உறுதி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ