)
Vijay Speech Highlights: மதுரை பாரபத்தி தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் நடிகர் விஜய் ஆவேசமாக பேசினார். இனி நான் முழு நேர அரசியல்வாதி என கூறிவிட்டு, பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.தனித்து போட்டியிடக்கூட தயார் என சூசகமாக சிங்க கதை மூலம் அறிவித்தார் நடிகர் விஜய். சினிமாவில் இருந்து முழுமையாக விலகிவிட்டதால் எனக்கு இனி அரசியலைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை, தமிழ்நாட்டு மக்களுக்காக முழுநேரம் அரசியல் பணியில் ஈடுபட இருப்பதாக அறிவித்தார். மேலும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவருடைய பேச்சின் முக்கிய அம்சங்களை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்....
எம்ஜிஆர் - விஜயகாந்துக்கு புகழாராம்
விஜய் தன் பேச்சின் தொடக்கத்திலேயே சினிமாவிலும், அரசியலும் எனக்கு தலைவர் எம்ஜிஆர் என கூறினார். அவரைப் போலவே வாழ்ந்தவர் விஜயகாந்த் என பேசினார். இவர்களின் காட்டிய அரசியல் பாதையில் தான் தன்னுடைய அரசியலும் இருக்கப்போகிறது என்பதை வெளிப்படையாக கூறினார். தனக்கு தமிழ்நாடு முழுவதும், அனைத்து வீடுகளிலும் செல்வாக்கு இருப்பதாக தெரிவித்தார். அதனால், எம்ஜிஆர், விஜயகாந்துக்கு மக்கள் வாக்களித்தைப் போல் தனக்கும் வாக்களிப்பார்கள், மக்கள் ஆதரவு இருக்கிறது என ஆளும்கட்சியாக இருக்கும் திமுகவுக்கு எச்சரிக்கை செய்தார்.
அதிமுகவை விமர்சிக்கவில்லை
திமுக, பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பதாக கடுமையாக விமர்சனம் செய்த விஜய், அதிமுக பற்றி பேசவில்லை. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இத்தனைக்கும் அதிமுக, பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைத்திருக்கும் கட்சி. அப்படி இருந்தும் அதிமுக குறித்து எந்த விமர்சனத்தையும் வைக்காமல் , பாஜக, திமுகவை மட்டும் கடுமையாக விமர்சித்தார்.
மத்திய அரசு மீது கடுமையான விமர்சனம்
ஒரு நாடாளுமன்றத் தொகுதி கூட கிடைக்காத மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிப்பதாக விஜய் குற்றம் சாட்டினார். கீழடியில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களை மத்திய அரசு மறைத்துவிட்டதாக அவர் கூறினார். மேலும், மத நல்லிணக்கத்துக்குப் பெயர் பெற்ற மதுரையில் இருந்து பாஜகவுக்குச் சொல்ல விரும்புவது, 'உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடிக்கு மூன்று கோரிக்கைகள்
தொடர்ந்து பேசிய விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 800-க்கும் மேற்பட்டோர் தாக்கப்படுவதைத் தடுக்க, கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும். நீட் தேர்வினால் நடக்கும் கொடுமைகளைச் சொல்லவே முடியவில்லை என்று வேதனை தெரிவித்த அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நன்மை செய்யவா அல்லது இஸ்லாமிய நண்பர்களுக்கு எதிராகச் சதி செய்யவா என்று கேள்வி எழுப்பினார்.
கொள்கை எதிரி பா.ஜ.க, அரசியல் எதிரி தி.மு.க
அரசியல் களத்தில் தனது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய விஜய், "நமக்கு ஒரே கொள்கை எதிரி, ஒரே அரசியல் எதிரிதான். நமது கொள்கை எதிரி பாஜக, ஒரே அரசியல் எதிரி தி.மு.க.தான்" என்று தெரிவித்தார். மேலும், "பாசிச பாஜகவுடன் நேரடி அல்லது மறைமுகக் கூட்டணி வைக்க நாம் என்ன ஊழல் கட்சியா?" என்று கேள்வி எழுப்பினார்.
2026-ல் தவெக - திமுக இடையே தான் போட்டி
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் போட்டி என்று விஜய் கூறினார். '1967, 1977-ல் நடந்தது போல 2026-ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்கும்' என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
'நான் சினிமாவின் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை'
'நான் சினிமாவில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை. நான் வந்ததற்கு ஒரே காரணம் நன்றிக்கடன். என் கடன் இனி என் மக்களுக்கு பணி செய்து கிடப்பதே,' என்று விஜய் தனது அரசியல் வருகைக்கான காரணத்தை விளக்கினார். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் தன் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ