)
TVK Madurai Maanadu: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்ட கடிதத்தில், "நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான தவெக மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட, புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ, இன்னும் சில மாதங்களே உள்ளன.
1967 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள், இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்" என 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை குறிப்பிட்டு விஜய் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், கட்சி மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் கட்சித் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை" என தனது தொண்டர்களை விஜய் வலியுறுத்தி உள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) August 18, 2025
மேலும், "மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட 'மனசாட்சி உள்ள மக்களாட்சி' என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்" என மாநாடு குறித்த எதிர்பார்ப்புகளை விஜய் வெளிப்படுத்தி உள்ளார்.
உங்கள் விஜய் உரிமையுடன் அழைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள அவர் மதுரை பாரப்பத்தியில் கூடுவோம் என்றும் தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில், மதுரையில் திட்டமிட்ட இந்த 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி திட்டமிடப்பட்டது. தேமுதிக நிறுவனரும், பிரபல நடிகருமான விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரையில், அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று தவெக மாநாடு நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.
அதாவது, ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமையாக இருந்தும் தவெக அந்த தேதியில் மாநாட்டை திட்டமிட்டதன் மூலம் விஜய்காந்தின் அரசியல் வாரிசு நான் தான் என விஜய் மறைமுகமாக வெளிப்படுத்தும் வகையில் தவெக இதை திட்டமிட்டதாக கூறப்பட்டது. ஆனால், விநாயகர் சதுர்த்தி பண்டிகை காரணமாக தற்போது தவெக மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ