Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு அரசு இன்று 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், இது பல்வேறு தரப்புகளில் இருந்து வரவேற்பை பெற்றாலும் எதிர்க்கட்சிகள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் பட்ஜெட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tamil Nadu Budget 2025: சில திட்டங்களுக்கு மட்டும் விஜய் வரவேற்பு
'மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்' என்ற தலைப்பில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில திட்டங்களை அவர் வரவேற்றும் உள்ளார். அந்த அறிக்கையில் அவர்,"தமிழ்நாடு அரசின் 2025-26ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன், பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu Budget 2025: 'விளம்பர மாடல் அரசு'
மேலும் அதில்,"அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே. புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?.
— TVK Vijay (@TVKVijayHQ) March 14, 2025
Tamil Nadu Budget 2025: விஜய் எழுப்பும் கேள்விகள்
அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்?; கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல, பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?; ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை, வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும்" என விஜய் சராமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்,"அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
Tamil Nadu Budget 2025: 'பரந்தூர் விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்'
மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை. மாறாக, மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு, பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.
Tamil Nadu Budget 2025: 'திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு?'
விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே போல, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்றே தெரியவில்லை.
பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம், மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம்.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - முழு விவரம்!
Tamil Nadu Budget 2025: பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்துவது, பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையாக ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.
Tamil Nadu Budget 2025: திமுக - பாஜக உறவுக்காரர்கள்
விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு. இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு விரைவில் உணரும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025 : பிடிஆர் பங்கேற்காதது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









