)
நேற்று சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சம்பள இடத்திற்கு விரைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர் உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, கரூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில், வரலாறு காணாத மக்கள் கூட்டம் திரண்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம், தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கோர சம்பவம் குறித்த செய்தி கிடைத்ததும் அதிர்ச்சியடைந்த விஜய், தனது பிரச்சார பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு, உடனடியாக சென்னை திரும்பினார். பலரும் விஜய் ஏன் மருத்துவமனை செல்லவில்லை என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் சம்பவத்தின் நிலை உணர்ந்து, சனிக்கிழமை இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக, அவர் காவல்துறையிடம் அனுமதி கோரியபோது, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அவரது வருகைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் வருகைக்குகாவல்துறை அனுமதி மறுத்ததற்கு பல முக்கியக் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என பெருங்கூட்டம் கூடியிருந்தது. இந்த சூழலில், விஜய் அங்கு வந்தால், மீண்டும் ஒரு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று காவல்துறை கருதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்தால், மக்கள் மிகுந்த கோபத்திலும், ஆத்திரத்திலும் இருந்தனர். விஜய்யின் வருகை, உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினைகளை தூண்டி, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த சம்பவம் தொடர்பாக, தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், குற்றம் சாட்டப்பட்ட கட்சியின் தலைவர், சம்பவ இடத்திற்கு செல்வது, விசாரணையை பாதிக்கக்கூடும் என்று காவல்துறை நினைத்திருக்கலாம். ஆளும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே கரூரில் முகாமிட்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ