புதுச்சேரியில் வருகின்ற 5-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்டு புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கடந்த புதன்கிழமை புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி இடம் மனு அளித்திருந்தனர். அதில் காலாப்பட்டு முதல் கன்னியகோயில் வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புஸ்சி ஆனந்த்
இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த சனிக்கிழமை அன்று டிஜிபியை சந்திக்க சென்றபோது அவர் அலுவலகத்தில் இல்லாததால் அன்று மாலை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்டிருந்தார். அதற்கு முதல்வர் ரங்கசாமி காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் கலந்து ஆலோசித்து அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆனந்த் இரண்டாவது முறையாக நேற்று ஐஜி அஜித்குமார் சிங்லாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து அனுமதி கோரி இருந்தார்.
ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை
தொடர்ந்து வெளியே வந்த அவர், விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். இதனிடையே கரூர் சம்பவத்தை காரணம் காட்டி ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், வேண்டும் என்றால் துறைமுக வளாகத்தில் கூட்டம் நடத்தி மக்களை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் இன்று தொடர்ந்து 3ம் நாளாக ரோடு ஷோவிற்கு அனுமதி கோரி SSPயை சந்திக்க பொதுச்செயலாளர்கள் ஆனந்த், மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் SSP அலுவலகம் சென்றனர். அப்போது SSP அலுவலகத்தில் இல்லாததால் அவர்கள் திரும்பி சென்றனர்.
புதுச்சேரி
தொடர்ந்து புதுச்சேரியில் வரும் 5 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி, ஐஜி, டிஐஜி மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார். சிறிது நேரத்தில் சட்டப்பேரவை வந்த ஆனந்த் மற்றும் அர்ஜூனா ஆலோசனையில் கலந்து கொண்டனர். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதால் ரோட் ஷோக்கு அனுமதி இல்லை என கூட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா வெளியே சென்றனர். முதலமைச்சர் உடன் ஆலோசனைக்கு பின்னர் வெளியே வந்த டிஐஜி சத்திய சுந்தரம் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்றும், பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்து உள்ளதாகவும், அதற்கான இடத்தையும், தேதியும் அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! டிசம்பர் மாதம் அமலுக்கு வரும் 3 புதிய திட்டங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









