UGC guidelines 2026 : கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக யுஜிசி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

UGC guidelines 2026 : இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு, மனநலம் மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 9, 2026 தேதியிட்ட இந்த அறிவிப்பில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் (HEIs) மாணவர் மைய விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள்
மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே உள்ள 7 முக்கியமான விதிமுறைகளை UGC மீண்டும் வலியுறுத்தியுள்ளது:
1. கேலி வதையை (Ragging) ஒழித்தல்: 2009-ஆம் ஆண்டு கேலி வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், வளாகங்களில் ராகிங் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
2. சமத்துவத்தைப் பேணுதல்: 2012-ஆம் ஆண்டு சமத்துவ ஊக்குவிப்பு விதிகளின்படி, ஜாதி, மதம் அல்லது பாலின அடிப்படையில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது.
3. பாலியல் வன்கொடுமை தடுப்பு: 2015-ஆம் ஆண்டு விதிகளின்படி, மாணவியர் மற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய 'உள் புகார் குழு' (Internal Complaints Committee) அமைக்கப்பட வேண்டும்.
4. குறைதீர்ப்பு மேலாண்மை: 2023-ஆம் ஆண்டு விதிகளின்படி, மாணவர் குறைகளைத் தீர்க்க 'மாணவர் குறைதீர்ப்பு குழு' (SGRC) மற்றும் 'ஒம்புட்ஸ்மேன்' (Ombudsperson) நியமனம் அவசியம்.
5. கல்வி கட்டணம் மற்றும் சான்றிதழ் பாதுகாப்பு: மாணவர்கள் பாதியில் வெளியேறினால் கல்வி கட்டணத்தைத் திரும்ப அளித்தல் மற்றும் அசல் சான்றிதழ்களைத் தேவையற்றுக் கல்வி நிறுவனங்கள் பிடித்து வைத்திருக்கக் கூடாது.
6. மனநலம் மற்றும் உடல்நலம்: மாணவர்களின் உடல் தகுதி, விளையாட்டு, உளவியல் ஆலோசனை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நல்வாழ்வை உறுதி செய்தல்.
கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டிய 7 முக்கிய நடவடிக்கைகள்
UGC செயலாளர் பேராசிரியர் மனிஷ் ஆர். ஜோஷி கையெழுத்திட்டுள்ள இந்த அறிவிப்பில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய 7 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன:
1. கமிட்டிகளை அமைத்தல் - கேலி வதை தடுப்புக் குழு, உள் புகார் குழு (ICC), சம வாய்ப்பு பிரிவு (Equal Opportunity Cell) மற்றும் குறைதீர்ப்பு பிரிவு ஆகியவற்றை முறையாக அமைத்துச் செயல்பட வேண்டும். இந்தக் குழுக்களின் விவரங்கள் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.
2. வெளிப்படையான குறைதீர்ப்பு முறை - மாணவர்களின் புகார்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிப்படையான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. மனநல ஆலோசனை மையங்கள் - வளாகங்களில் மாணவர்களுக்கான தொழில்முறை ஆலோசனைகள் (Counselling services) மற்றும் மனநல ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
4. வளாகப் பாதுகாப்பு - சிசிடிவி (CCTV) கண்காணிப்பு மற்றும் போதுமான பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
5. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்- மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு விதிகள் குறித்துத் தொடர்ச்சியான விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும்.
6. முறையான ஆவணப்படுத்துதல் - கமிட்டி கூட்டங்களின் விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை (Action Taken Reports) முறையாகப் பராமரிக்க வேண்டும்.
7. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆதரவு - பாதிக்கப்படக்கூடிய மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தேவையான விசேஷ உதவிகள் மற்றும் வசதிகளைக் கல்வி நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், தங்களின் கீழ் உள்ள கல்லூரிகள் இந்த விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று UGC கேட்டுக்கொண்டுள்ளது. மாணவர்கள் இது குறித்த கூடுதல் விவரங்களை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் பாதுகாப்பு வெறும் விதிமுறை மட்டுமல்ல, அது அவர்களின் கல்வி கற்கும் உரிமையின் அடிப்படை என்பதை இந்தச் சுற்றறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ