'90களில் நான் சந்தித்த நெருக்கடிகள் விவரிக்க முடியாதது' - திருமா சொல்வது என்ன?

VCK Thirumavalavan: விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரால் தான் சந்தித்த நெருக்கடிகள் குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : May 18, 2025, 09:52 PM IST
'90களில் நான் சந்தித்த நெருக்கடிகள் விவரிக்க முடியாதது' - திருமா சொல்வது என்ன?

Tamil Nadu Latest News Updates: சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (மே 18) நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது, "விடுதலைச் சிறுத்தைகள் என்கிற இந்த பெயர் காரணத்தினால் பல நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. 

VCK Thirumavalavan: விடுதலைச் சிறுத்தைகள் பெயருக்கு வந்த நெருக்கடிகள்...

விடுதலைச் சிறுத்தைகள் என்கிற போது விடுதலைப் புலிகளை நினைவூட்டுகிறது; விடுதலைப்புலிகளோடு உங்களுக்கு நெருக்கம் இருப்பதாக காவல்துறை, உளவுத்துறை சந்தேகிக்கிறது; இதனால் உங்களை உளவுத்துறையினர் பின் தொடர்கிறார்கள். தேவையற்ற பதற்றத்தை உங்களுக்கு தருகிறார்கள். 90களில் தொடக்கத்தில் நான் சந்தித்த நெருக்கடிகளை விவரிக்க முடியாது.

இந்த பெயர் உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஈர்ப்பைத் தரலாம்; பெண்களுக்கு, பொதுமக்களுக்கு ஈர்ப்பை தராது. பெண்களுக்கு ஈர்ப்பைத் தராது என்றெல்லாம் எனக்கு அறிவுரை சொன்ன காலம் உண்டு. அப்போதும் நாம் நிலப்பரப்பில் இருந்தாலும் ஒரே கருத்தியல் களத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வோடு தான் என் நிலைப்பாட்டை நான் உறுதியாக பற்றிக் கொண்டேன், பின்வாங்கவில்லை.

VCK Thirumavalavan: தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது எப்படி?
 
தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைக்க நேர்ந்தது. தேர்தல் அரசியலில் கால்வைத்த பிறகு இதை ஒரு தேர்தல் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என்கிற தேவை எழுந்தது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் பலரும் எனக்கு ஆலோசனை சொன்னார்கள். கட்சிக்கு வேறு பெயர் சூட்டுங்கள் என்றனர். இது வேண்டுமானால் ஒரு இளைஞர் இயக்கமாக இருந்து விட்டுப் போகட்டும். திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்லுகிற போது எவ்வளவு மியூசிக்கலாக இருக்கிறது என்று ஒருவர் வந்து என்னிடத்திலே சொன்னார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று எழுதிக் கொடுத்தபோது தேர்தல் ஆணைய அதிகாரி என்னிடம், 'மிருகங்களின் பெயர்களை நாங்கள் கட்சிக்கு அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். பெயரை மாற்றிவிட்டு வாருங்கள்' என்று சொல்லி திருப்பி கொடுத்துவிட்டார். அமர்ந்து பேசினேன், அவர் ஜனநாயக சிந்தனையாளர். கொஞ்சம் யோசித்தார். இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் பார்ப்போம் என்றார். பின்னர் அந்தப் பெயரை பதிவு செய்து தந்தார்.

VCK Thirumavalavan: அப்போது அதிமுக உடன் நின்றது ஏன்...?

எதற்கு இதை நான் உங்களிடத்தில் நினைவுப்படுத்துகிறேன் என்றால் 20களின் தொடக்கத்திலே எனக்கு என்ன உணர்வும், புரிதலும் இருந்ததோ அதுதான் 50களிலும் இருந்தது; இன்றைக்கு 60களிலும் இருக்கிறது; அதில் இருந்து நான் வழுவவில்லை, நழுவவில்லை, விலகவில்லை.

ஈழப்போரின் போது திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணிப் பற்றி கவலைப்படாமல் நின்றேன். ஈழத் தமிழர் பிரச்னை தான் முதன்மையானது, அதற்காகவே இவர்களுடன் கைக்கோர்த்து நிற்பதே முதன்மையானது என்றே அடிப்படையில் பயணம் செய்தோம். ஈழத்தமிழர்களுக்காக நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன்.

VCK Thirumavalavan: அமெரிக்காவை இப்போதும் எதிர்கொள்ள ஆளில்லை! 

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு அரசியல் போக்கு தமிழ்நாட்டில் மாறிப்போனது. செல்வாக்கு மிக்க கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் இருந்து வந்த சூழலில், அதன்பின் அதிமுக ஈழத்தமிழர் விவகாரத்தில் இருந்து முற்றாக விலகி நின்றது. 1991 முதல் 2009 வரையிலும் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக ஆதரித்தோ, பரிந்தோ ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. 

பத்தாண்டுகளில் தமிழ்நாடு; தனி நாடு என்கிற நிலைக்குப் போய்விடும், அப்படி ஒரு அரசியல் இங்கே உருவாகி விடக்கூடாது, தடுக்க வேண்டும் என்கிற தேவையும் அன்றைக்கு இந்திய அரசுக்கு இருந்தது. இன்றைக்கும் அமெரிக்காவுக்கு எதிராக நிற்கிற ஒரு வல்லரசு என்று சொல்லத்தக்க நாடு எதுவும் இல்லை. பொருளாதார வலிமை பெற்ற ஒரு பேரரசாக வல்லரசாக சீனா இருந்தாலும் கூட ராணுவ அடிப்படையிலே அமெரிக்காவை எதிர் கொள்ளக்கூடிய வகையில் எந்த வல்லரசு இன்னும் உருவாகவில்லை" என பல்வேறு நினைவுகளை இங்கு பகிர்ந்துகொண்டார்.

மேலும் படிக்க | 'கூட்டணி இல்லை என விஜய் சொல்லவில்லை' தமிழிசை கருத்து... தவெக பக்கா பதிலடி!

மேலும் படிக்க |  'ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்' 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம் - என்ன மேட்டர்?

மேலும் படிக்க | ஜெர்மன் படிக்க ஆசையா? தமிழக அரசின் இலவச பயிற்சி... முடித்தால் ரூ.2 லட்சம் சம்பளம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News