)
Vellore CRPF Woman Viral Video: வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை பகுதியை அடுத்த நாராயணபுரம் பகுதியில் சேர்ந்தவர் குமாரசாமி (65). இவரது மகள் கலாவதி (32). கலாவதி ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 27ஆம் தேதி அன்று நாராயணபுரத்தில் வசித்து வந்த குமாரசாமி அன்று அதிகாலை தனது விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்று விட்டு மாலை வீடு திரும்பி வந்துள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குமாரசாமி பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து பொன்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படைப்பிரிவில் பணியாற்றி வரும் காவலர் கலாவதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் வீடியோ முழுவதும் கண்ணீர் விட்டு அழுதபடி பேசியது பெரும் வைரலாக பரவி வருகிறது. அதில், "எங்கள் வீட்டில் எங்கள் அப்பா விவசாய நிலத்திற்கு சென்ற போது யாரோ வீட்டை உடைத்து எனது திருமணத்திற்காக வைத்திருந்த 22.5 சவரன் நகைகள், பட்டு புடவை, மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் அன்றிரவே எனது அண்ணன் புகார் அளித்தார். ஆனால், அடுத்த நாள் முதலமைச்சர் பந்தோபஸ்து இருப்பதால் ஆள் இல்லை என கூறிவிட்டார்கள். மேலும், வீட்டில் இருந்து திருடர்களின் கைரேகையை கைப்பற்றவே அடுத்த நாள் (ஜூலை 25) மதியம் 12 மணிக்குதான் வந்தார்கள். மேலும், விசாரணையை தாமதம் செய்து ஜூலை 28ஆம் தேதிதான் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை நகையை கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, எனது திருமணத்திற்காக வாங்கி வைத்த நகைகள் போய்விட்டது. நானும் முடிந்தளவு அனைத்து தரப்பிலும் முயன்றுவிட்டேன். எனக்கு யாருமே உதவவில்லை" என சீருடையில் இருந்தவாறு அவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.
A CRPF jawan from Tamil Nadu, serving with honour at our nation’s borders in J&K, is forced to take to social media on police inaction on the case of jewellery theft from her residence near Katpadi in June this year.
— K.Annamalai (@annamalai_k) August 4, 2025
What kind of governance forces a woman in uniform to beg for… pic.twitter.com/BnU6WtT99l
இந்த வீடியோ அதிகம் வைரலான நிலையில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இதை தனது X பக்கத்தில் பகிர்ந்து தமிழ்நாடு அரசை கண்டித்து பதிவிட்டிருந்தார். அண்ணாமலை அந்த பதிவில், "ஜம்மு-காஷ்மீரில் நமது நாட்டின் எல்லைகளில் மரியாதையுடன் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு CRPF வீராங்கனை, இந்த ஆண்டு ஜூன் (தவறுதலாக ஜூன் என குறிப்பிடப்பட்டுள்ளது, ஜூலை மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது) மாதம் காட்பாடி அருகே தனது வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கையே எடுக்கவில்லை என சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சீருடையில் இருக்கும் ஒரு பெண், தனது தோளில் தேசியக் கொடியை சுமந்தபடி ஆன்லைனில் நீதிக்காக கெஞ்ச வைக்கும் அளவுக்கு எந்த வகையான நிர்வாகம் செயல்படுகிறது? இது வெறும் சட்டமீறல் மட்டுமல்ல, குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் திமுகவின் ஆட்சி மாடலாகும், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள். தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள் ஸ்டாலின்" என தமிழ்நாடு அரசை சாடி பதிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், CRPF காவலர் வீடியோ குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் கேட்டபோது, "அவர்கள் புகார் அளித்த மறுநாளே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்துள்ளார்கள். புகார்தாரர் மற்றும் பெண் காவலர் யார் யார் மீது சந்தேகம் இருக்கிறது என கூறியுள்ளார்களோ அவர்கள் அனைவரிடத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளோம். தற்போது வரை 80 சதவித விசாரணை முடிந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் காணாமல் போன நகையை மீட்போம், இந்தச் சூழலில் அவர் எதற்காக வீடியோ வெளியிட்டார் என தெரியவில்லை" என கூறினர்.
மேலும், வீடியோவில் அழுதபடி பேசிய CRPF பெண் காவலருக்கு பொன்னையை சேர்ந்த சத்யா என்ற ராணுவ வீரருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் 6 மாதத்திலேயே இருவரும் பிரிந்துள்ளனர். அவர் (சத்யா) தான் நகையை எடுத்திருப்பார் என பெண் காவலர் கூறியதை தொடர்ந்து அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வீடியோவில் தனது திருமணத்திற்காக வைத்திருந்த 22.5 சவரன் நகைகள், பட்டு புடவை, மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ