)
Vijay Today Speech : மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் நடிகர் விஜய் பல முக்கிய விஷயங்களை பேசினார். சினிமாவிலும், அரசியலிலும் என்னுடைய தலைவர் எம்ஜிஆர் என்ற அவர், அவரைப்போலவே வாழ்ந்தவர் விஜயகாந்த் என புகழாரம் சூட்டினார். கொள்கை எதிரி பாஜக, திமுக அரசியல் எதிரி என மீண்டும் சூளூரைத்தார் விஜய். திமுக, மத்திய பாஜகவுடன் மறைமுக கூட்டணியுடன் இருப்பதாக விமர்சித்த விஜய், இந்தக் கூட்டணியை 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி வீழ்த்தும் என்றார். ஊழல், குடும்ப ஆட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சி என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசை, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி வீட்டுக்கு அனுப்பும் என்று விஜய் கூறினார்.
விஜய் வைத்த குற்றச்சாட்டு
ஆர்எஸ்எஸ் கொள்கைகள் தமிழ்நாட்டில் எடுபடாது என கூறிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தேர்தலில் வெற்றி பெறவில்லை, தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போடவில்லை என்பதற்காக பாஜக தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்வதில்லை என்றார். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யக்கூடாது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டார். கூட்டணியைப் பொறுத்தவரை தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடக்கூட தயாராக இருந்தாலும், தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும், அமைச்சரவையிலும் சரியான பங்களிப்பு கொடுப்போம் என கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேள்வி
தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? என முதலைமச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய விஜய், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என கூறினார். திமுக அரசியல் ரீதியாக பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பதாக மீண்டும் குற்றம்சாட்டினார். அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது ரெய்டு வந்துவிட்டால் உடனே தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் டெல்லிக்கு ஏதோ மீட்டிங் என கூறி டெல்லிக்கு புறப்படுவதாகவும், அங்கு ஆட்சியில் இருப்பவர்களை ரகசியமாக சந்தித்து டீலிங் போடுவதாகவும் குற்றம்சாட்டினார் தவெக தலைவர் விஜய். அந்த டீலிங்கிற்கு பிறகு ரெய்டு குறித்த எந்த சத்தமும் கேட்பதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
முழுநேர அரசியலில் ஈடுபடுவேன்
ஊரை ஏமாத்துற கட்சி தவெக இல்லை, ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர். அதற்கு பலரை எடுத்துக்காட்டாகவும் கூறினர். அதேபோல விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்றனர். இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது, இந்த கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல, மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும் என அதிரடியாக பேசினார். மேலும், எனக்கு இனி வேறு எந்த வேலையும் இல்லை, இனி முழுநேர அரசியலில் மட்டுமே இருக்கப்போவதாக தெரிவித்தார். எப்போதும் மக்களுடன் மக்களாக மட்டுமே இருப்பேன் என்றும் நடிகர் விஜய் கூறினார்.
தவெக வேட்பாளர் பட்டியல்
மிக முக்கியமாக தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன் என அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். மதுரை கிழக்கு, உசிலம்படி என எல்லா இடத்திலும் விஜய் ஆகிய நானே போட்டியிடுகிறேன் என கூறிய அவர், தமிழ்நாட்டில் உள்ள எல்லா தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என கூறினார். விஜய்யின் இந்த பேச்சு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ