)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக திமுக அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். அதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டும் நேரில் வராதது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குரியதாக மாறி உள்ளது.

இது தொடர்பான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் வழங்கினார் என்ற தகவல் வெளியானது . "விரைவில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன், உங்கள் குடும்பங்களுடன் உறுதியாக இருப்பேன்" என்ற உறுதியும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் நேரில் வருவதற்கான அனுமதி கோரி தவெக சார்பில் தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதில், "கரூர் செல்ல அனுமதி வழங்க வேண்டும்" எனவும், "தற்போதைய சூழலில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கடிதத்திற்கு, டிஜிபி அலுவலகம் விரைவாக பதிலளித்துள்ளது. தங்கள் பதிலில், “விஜய் கரூர் செல்லும் தேதி, நேரம், இடம், செல்லும் வழி, நிகழ்ச்சி விவரம் ஆகிய அனைத்தையும் கரூர் மாவட்ட எஸ்.பி.க்கு வழங்க வேண்டும். விவரங்களை முழுமையாக சமர்ப்பித்த பிறகு, மாவட்ட போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை செய்து பின்பு அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர். விஜய் தரப்பில் காவல்துறைக்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கை அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை கரூரில் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நிலையில் தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "கரூர் விபத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டும் என்றால், தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மூலம் அது முறையாக நடைபெறாது. இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை," என்ற முக்கிய குற்றச்சாட்டை தவெக முன்வைத்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ