Vijay : கரூர் சம்பவத்துக்கு யார் காரணம், அடிமை செந்தில் பாலாஜி ஏன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்? என தவெக தலைவர் விஜய் காரசாராக இன்று பேசினார்.

Vijay : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முனைப்பு காட்டிய நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும் விதமாக இன்று நீண்ட உரையாற்றினார். அப்போது கரூர் சம்பவம் குறித்து முதன்முறையாக ஓபனாக பேசிய விஜய், திமுகவையும், செந்தில் பாலாஜியையும் காரசாரமாக விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழகம் எல்லாம் ஒரு கட்சியா? என செந்தில் பாலாஜி பேசிய ஓரிரு நாட்களில் விஜய் இந்த கடுமையான பதிலடியை கொடுத்திருக்கிறார்.
திமுக அரசு மீதான நேரடித் தாக்குதல்
பேச்சின் தொடக்கத்திலேயே திமுக ஆட்சியை "மக்களைக் கண்டு கொள்ளாத ஆட்சி" என்று விமர்சித்த விஜய், முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பினார். "பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி என அனைத்தையும் உயர்த்தி மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கிவிட்டனர். குப்பைக்குக் கூட வரி போடும் நிலைக்குத் தள்ளிவிட்டனர்" என்று சாடினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு கடன் வாங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தப் பணத்தைக் கொண்டு இளைஞர்களின் கல்விக்கடனைக் கூட ரத்து செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
கரூர் விவகாரம்
கரூர் விவகாரம் குறித்து முதன்முறையாக பேசிய விஜய், அந்த சம்பவத்துக்கு தான் லேட்டாக வந்ததே காரணம் என சொல்லப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என ஆணித்தரமாக பேசினார். உண்மையில் காவல்துறை சொன்ன நேரத்திலேயே தான் இருந்ததாகவும் விளக்கமளித்தார். "20 வருஷமாக கரூரில் மட்டுமே நின்ற தனது ஒரு அடிமையை, இன்று கோயம்புத்தூர் வரை ஓட விட்டதே எனது வளர்ச்சிக்குச் சாட்சி. அவர் ஏன் கோவைக்கு ஓடினார்?" என்றும் விஜய் ஆவேசமாக பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில் அளிக்கும்போது, அதெல்லாம் ஒரு கட்சியா? என கேட்டார். அதற்கு காரசமாக இன்றைய பேச்சில் செந்தில் பாலாஜி அடிமை என பதிலடி கொடுத்திருக்கிறார் விஜய்.
'அண்டர் கிரவுண்ட் டீலிங்' - பாஜக உடனான தொடர்பு
தொடர்ந்து பேசிய விஜய், " பாஜக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு மறைமுகமான உடன்பாடு இருக்கிறது. வெளியில் மதச்சார்பின்மை என்று பேசிக்கொண்டு, மத்திய அரசிடம் இருக்கும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மோடி மற்றும் அமித்ஷா அவர்களின் காலில் விழுந்து கிடக்கிறார்" என்று கடுமையாக விமர்சித்தார். சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற ஒரு நாடகமும், கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் ஒரு நாடகமும் ஆடுவதாகக் கூறி, "இவர்கள் ஒரு ஆபத்தான நாடகக் கம்பெனி" என்று வருணித்தார்.
அதிமுக, எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்காத விஜய்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பெயரைக் குறிப்பிடாமல், கடுமையாக விமர்சித்தார். 10 தடவை தோத்துப் போனவரே என கூறிய விஜய், எடப்பாடி தொகுதியை தவிர வேறு எந்த தொகுதியிலாவது நின்று உங்களால் ஜெயிக்க முடியுமா? என சவால் விட்டார். "சொந்தத் தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தனது சின்னத்தையே திருடிவிட்டனர்" என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அவர், எடப்பாடி தொகுதி மக்கள் விசில் சின்னம் போட்டியிடாததால் அந்த தொகுதியில் சுயேட்சைக்கு ஆதரவளிப்பதாகவும், டிவி சின்னத்துக்கு அந்த தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார்.
கொள்கை உறுதி மற்றும் மும்மத நல்லிணக்கம்
தன்னைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளுக்குப் பதிலளித்த அவர், "நான் நடிகன்தான், ஆனால் அரசியலில் நடிக்கவில்லை" என்றார். "இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் ஒரிஜினல் முகம்" என்று கூறினார். மதச்சார்பற்ற சமூக நீதி என்பது தனது கட்சியின் அடிப்படை அஸ்திவாரம் என்றும், அதிலிருந்து ஒரு இஞ்ச் கூட மாறப்போவதில்லை என்றும் உறுதி அளித்தார்.
கருத்து கணிப்புகள் மீது விமர்சனம்
"40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே விஜய்க்கு ஓட்டுப் போடுவார்கள்" என்று வெளியான கருத்துக்கணிப்புகளைத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளைக் கொண்டு பதிலளித்தார். 40 வயதிற்கு உட்பட்ட வாக்காளர்கள் மட்டும் 2 கோடியே 37 லட்சம் பேர் இருப்பதாகவும், 50 வயதிற்குள் இருப்பவர்களைச் சேர்த்தால் 3 கோடியே 65 லட்சம் பேர் இருப்பதாகவும் கூறினார். "வீட்டுப் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விஜய்யின் இறுதி வேண்டுகோள்
தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதியை 'அக்னி நட்சத்திரம்' தொடங்கும் நாளுடன் ஒப்பிட்ட விஜய், "சூரிய வெப்பம் மண்டையைப் பிளக்கும்போது மக்கள் எப்படி அந்தச் சூரியனை வெறுத்து ஒதுக்குவார்களோ, அதேபோல் இந்தத் தேர்தலில் மக்கள் திமுக-வை வெறுத்து ஒதுக்கப் போகிறார்கள்" என்று ஆரூடம் கூறினார். "உங்கள் பிள்ளைக்கு, உங்கள் அண்ணனுக்கு, உங்கள் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்" என்ற உருக்கமான வேண்டுகோளுடன் பேச்சை முடித்தார் விஜய்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!