)
தமிழகத்தின் முதல்வராக விஜய் இன்று பதவியேற்றுள்ளார். கடந்த மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து விஜய் எப்போது முதல்வராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைக்க 10 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டது. இதனால் கூட்டணி கட்சிகளின் உதவியை நாடிய விஜய், அவர்களின் ஆதரவுடன் தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றார். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளனர். இன்று சென்னை நேரு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று வரலாற்று சாதனை படைத்தது உள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றதும் அவர் பேசிய முதல் பேச்சு ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு அரசியலில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ளார். முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து, 9 மூத்த மற்றும் இளம் தலைவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்த கையோடு, மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான கோப்பில் அவர் தனது முதல் கையெழுத்தை இட்டார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தனது அரசின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். "ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் யாராக இருந்தாலும் சரி, எனது அமைச்சரவையில் உள்ளவர்களோ அல்லது கட்சியினரோ தவறு செய்தால், தயவுதாட்சண்யமின்றி அவர்களை கேள்வி கேட்பேன். தவறுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தவெக தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் முக்கிய அறிவுரை ஒன்றையும் வழங்கினார். "நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதற்காக, யாரும் மமதையுடன் நடந்துகொள்ள கூடாது. இந்த வெற்றி மக்கள் நமக்களித்த பொறுப்பு. அதை உணர்ந்து அடக்கத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தனது உரையில் விஜய் மேலும் பேசுகையில், "தமிழ்நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்ற ஒரு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளீர்கள். எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதை நான் அறிவேன். ஆனால், முன்பு இருந்த அரசு கஜானாவை சுத்தமாக காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். எனவே, அனைத்துத் திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்துவதற்கு எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள்" என்று கோரிக்கை வைத்தார். மேலும் "என்னுடைய அரசில் ஒரே அதிகார மையம் தான் இருக்கும். பல அதிகார மையங்களுக்கு இங்கு இடமில்லை. அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும். மேலும், தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் தற்போதைய நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடுவேன்" என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
ஊழலற்ற, வெளிப்படையான, மதச்சார்பற்ற ஆட்சியை கொடுப்பேன் என்ற முழக்கத்துடன் அரசியலில் களமிறங்கிய விஜய், இன்று முதலமைச்சராக பொறுப்பேற்று தனது முதல் உரையை மிகவும் முதிர்ச்சியுடனும் அதிரடியாகவும் ஆற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. எந்தவொரு முன் அனுபவமும் இன்றி அரசியலுக்கு வந்து, மிகப்பெரிய தலைவர்களை எதிர்கொண்டு ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ள விஜய்யின் இந்த அடுத்தகட்ட பயணம் எவ்வாறு இருக்கும் என்பதை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
| முதல்வரின் முதல் 3 திட்டங்கள் | பயனாளர்கள் |
|
200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம்! |
தமிழக மக்கள் |
| சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை | தமிழக மக்கள் |
| போதை பொருள் தடுப்பு | தமிழக மக்கள் |
1. தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் எப்போது பதவியேற்றார்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
2. விஜய்யின் பதவியேற்பு விழா எங்கு நடைபெற்றது?
முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
3. விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் யார்?
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் விஜய்க்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
4. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்து என்ன?
முதலமைச்சராகப் பதவியேற்றதும் மக்கள் முன்னிலையிலேயே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான கோப்பில் விஜய் தனது முதல் கையெழுத்தை இட்டார்.
5. முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் விஜய் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம் என்ன?
"ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் யாராக இருந்தாலும் சரி, எனது அமைச்சரவையில் உள்ளவர்களோ அல்லது கட்சியினரோ தவறு செய்தால், தயவுதாட்சண்யமின்றி அவர்களைக் கேள்வி கேட்பேன்" என விஜய் தனது உரையில் அதிரடியாக அறிவித்தார்.