)
கரூரில் ஏற்பட்ட சோக சம்பவத்தை தொடர்ந்து, தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அடுத்த கட்ட அரசியல் பிரச்சாரத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தால் மனமுடைந்த விஜய், தனது பிரச்சார பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், "எனது அரசியல் பயணம் இனி இன்னும் வேகமாகவும், தீவிரமாகவும் இருக்கும்" என்று சூளுரைத்தார். இது, அவர் மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்க தயாராகிவிட்டதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்பட்டது.

அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், குறிப்பாக கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை ஒட்டியுள்ள சேலம் மாவட்டத்தின் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் இருந்து அடுத்த கட்ட பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று விஜய்யிடம் வலுவான கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. நிர்வாகிகளின் இந்த வேண்டுகோளை விஜய் ஏற்றுக் கொண்டதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே தொடங்குமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூறுகையில், "கரூர் துயர சம்பவத்தின் தாக்கத்திலிருந்து தலைவர் விஜய் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. பொதுக்குழுவில் நாங்கள் விடுத்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டது உண்மை தான். ஆனால், பிரச்சாரத்திற்கான தேதியை கட்சித் தலைமைதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். தலைமை அறிவித்தவுடன், அதற்கான பணிகளும், அனுமதிகளும் பெறப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
விஜய் தனது பிரச்சாரத்தின் போது, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, ஆளும் கட்சியை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். உதாரணமாக, கரூரில் நடந்த பிரச்சாரத்தின் போது, மதுபான பாட்டில்களுக்குக் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, "பாட்டிலுக்கு 10 ரூபாய்" என பாடல் பாடி, ஆளும் கட்சியை நேரடியாக விமர்சித்தார். அதே பாணியில், தற்போது எதிர்க்கட்சித் தலைவரின் சொந்த மாவட்டமான சேலத்தில் பிரச்சாரத்தைத் தொடங்குவது, எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சீண்டும் ஒரு செயலாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
சேலத்தின் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தி, எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை கேள்விக்குள்ளாக்கும் வகையில் விஜய்யின் பேச்சு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஆளும் கட்சிக்கு மட்டுமல்லாமல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் தவெக ஒரு சவால் என்பதை உணர்த்தும் ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது. எனவே, சேலத்தில் விஜய் பிரச்சாரத்தைத் தொடங்கும்போது, தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ