தவெக செய்யும் சேட்டைகள்... அனுபவம் இல்லாத அடாவடி அரசியல் - Its Very Wrong Bro!

Tamilaga Vetri Kazhagam: தவெகவின் அரசியல் அனுபவமின்மை குறித்து தொடர்ந்து அதிக பேசப்பட்டு வரும் நிலையில், சேலத்தில் விஜய் பேச்சுக்கு பின்னர் நடந்த இன்றைய நிகழ்வுகளும் அதையே உறுதிப்படுத்துகின்றன. இதுகுறித்து விரிவாக இங்கு அலசலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 13, 2026, 08:16 PM IST
  • தவெக தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல்
  • செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்து அடாவடியில் ஈடுபட்டனர்.
  • சேலம் நிகழ்வுக்கு பின் நடந்த சம்பவம்
தவெக செய்யும் சேட்டைகள்... அனுபவம் இல்லாத அடாவடி அரசியல் - Its Very Wrong Bro!

Tamilaga Vetri Kazhagam Salem Meeting: தமிழக வெற்றிக் கழகம் கடந்த பிப். 2ஆம் தேதி மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த சூழலில், அதன் அதிமுக்கிய டார்கெட்டாக இருந்ததே 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்தான். 

Add Zee News as a Preferred Source

அதை முன்னிட்டு கடந்தாண்டே மக்கள் சந்திப்பு கூட்டத்தை விஜய் தொடங்கினார். ஆனால், கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்டநெரிசல் சம்பவத்தால் 41 பேர் உயிரிழந்த நிகழ்வு அவரது அரசியல் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அவரது சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தவெகவும் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை அறிவிக்கவே இல்லை.

55 நாள்களுக்கு பின்

உள்அரங்குகளில் அடுத்த கட்சியின் கூட்டங்களை நடத்தி வந்த விஜய், கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஈரோட்டில் திறந்தவெளி மைதானத்தில் தவெக பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதன்பின், சுமார் 55 நாள்களுக்கு பின் இன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் திறந்தவெளி மைதானத்தில் தவெக மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. அதில் பொதுமக்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மதியம் கடுமையான வெயிலில் இந்த கூட்டம் நடந்தது.

ஒருவர் உயிரிழப்பு

இந்நிலையில், கடுமையான வெயிலில் காத்திருந்ததாலும், பார்வையாளர்கள் அமர இருக்கைகள் பெரியளவில் இல்லாத நிலையிலும், அக்கூட்டத்தில பங்கேற்ற வெள்ளி பட்டறை தொழிலாளி சூரஜ் (37) என்ற இளைஞர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே அவர் மயக்கமிட்ட நிலையில், அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மாரடைப்பால் மரணம்

இவர் உயிரிழந்தது குறித்து போலீசார் அளித்த தகவலின்படி, "தவெக விஜய் கூட்டத்தின் போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என்றனர். மேலும், சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பு தெரிவித்தது.

4,988 பேருக்கு மட்டுமே அனுமதி

கரூர் சம்பவத்திற்கு பின் அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கான வழிகாட்டு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கூட்டத்திற்கு அது மேலும் கடுமையாக்கப்பட்டது. நுழைவுத் தரநிலை செயல்பாட்டு நடைமுறைகள் (SOPகள்) மாற்றப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை காரணமாக கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் அடையாளங்கள் கூட்டம் நடந்த இடத்தில் கண்டிப்பாக சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள கேவிபி கார்டனில் மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை திட்டமிடப்பட்ட இந்த கூட்டத்தில், காவல்துறை வழிகாட்டுதல்களின்படி 4,998 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க அளிக்கப்பட்டது. எவ்வித விதிவிலக்குகளும் இல்லாமல், QR குறியீட்டை கொண்ட நுழைவுச் சீட்டுகளுடன் வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, இன்று உயிரிழந்த சூரஜ் அனுமதியுடன் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர் என்பது இங்கு உறுதியாகிறது.

சிடிஆர் நிர்மல் குமார் இரங்கல்

இந்தச் சூழலில், தவெக கட்சியின் பக்கத்திலோ, விஜய் தரப்பிலோ உயிரிழந்தவருக்கு தற்போது வரை இரங்கல் கூட தெரிவிக்கப்படவில்லை. தவெகவின் இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமாரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "இன்று தவெக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார். அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என பதிவிட்டிருந்தார். 

மேலும் அவர் அளித்த பேட்டியில்,"4,998 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது, ஆனால் அதைவிட குறைவான நபர்களையே அனுமதித்தோம். 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கூட்டம் நடந்த இடத்தில் இருந்த. சிகிச்சை அளிக்க பல மினி-கிளினிக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து ஆம்புலன்ஸ்களும் அவசர உதவிக்கு தயாராக இருந்தன. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை எங்களுக்கு அனுமதி இருந்தது. விஜய்யின் உரைக்குப் பிறகு, மதியம் 1:10 மணிக்கு நிகழ்ச்சியை நிறைவுசெய்தோம். பொதுமக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறோம். வேறு எந்த அசம்பாவதிமும் நடக்கவில்லை" என்றார்.

செய்தியாளர் மீது தாக்குதல்

உயிரிழந்த சூரஜ்ஜிற்கு ஏற்கெனவே அண்மையில் ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இந்தச் சூழலில், உயிரிழந்த சூரஜின் நண்பர் மணிகண்டன் அளித்த பேட்டியில், "எனக்கு அவர் (சூரஜ்) 20 வருடம் நண்பர். அவருக்கு உடல் நல பிரச்சனை இருந்தது, அதனால் தான் மயக்கம் அடைந்து உயிரிழந்து விட்டார் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூறுவது பொய்" என தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, சூரஜ் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் சூரஜ்ஜின் குடும்பத்தினரிடம் செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றபோது, அவர்கள் மீது தவெகவினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். செய்தியாளர்களை தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. மோதலின் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

தவெகவின் அரசியல் அனுபவமின்மை

கூட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு போதுமான இருக்கைகள் போடாதது; கடுமையான மதிய வேளையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது; செய்தியாளர்களிடம் அத்துமீறி அடாவடியில் ஈடுபடுவது என தவெகவின் ஒவ்வொரு கூட்டத்திலும் அவர்களது தொண்டர் படையின் அரசியல் அனுபவமின்மை வெட்டவெளிச்சமாகிறது. தொண்டர்களுக்கு மட்டுமின்றி தவெக நிர்வாகிகளுக்குமே தொண்டர்களை வழிநடத்தும் அனுபவம் இருக்கிறதா என்ற கேள்வியே எழுகிறது.

இணையத்திலும் தவெக தொண்டர்களுக்கு நல்ல பெயர் இல்லை என்பது நிதர்சனமாக உள்ளது, இணையத்தில் பிரபலங்கள் முதல் விமர்சனக் கருத்துகளை முன்வைப்போரை மரியாதையற்ற வார்த்தைகளில் தவெகவினர் தாக்குவதாக எக்கச்சக்க புகார்கள் வந்தன. உதாரணத்திற்கு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூட தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்களின் அரசியல் அனுபவமின்மை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

வசனங்கள் மட்டும் போதாது...  

செங்கோட்டையன் போன்று அங்கொன்றும் இங்கொன்றும் அனுபவம் வாய்ந்தவர்களை வைத்துக்கொண்டு பெருந்திரள் தொண்டர் படையை வழிநடத்த முயல்வது கத்தி மேல் நடப்பதற்கு சமம். திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இதுபோன்ற பிரச்னைகள் பெரிதாக இல்லை. கட்சித் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில், இதுபோன்ற அனுபவ பற்றாக்குறையை இணங்கண்டு அவற்றுக்கு தீர்வு காண விஜய் போன்றோர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

'ஆமாம் கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லைதான்' போன்ற விஜய்யின் பிரச்சார வசனங்களில் ஏதும் தவறில்லை என்றாலும் இணையம் முதல் களம் வரை தவெகவில் நிலவும் யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத, துடுக்குத்தனத்துடன் திரியும் தொண்டர்களை சீர்படுத்த வேண்டிய பொறுப்பு விஜய்யிடம் இருக்கிறது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால், தவெக தேர்தலில் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி மக்கள் மத்தியிலும், தவெக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கு் ஜனநாயக விரும்பிகளும் கூட இவர்களிடம் இருந்து தள்ளிப்போக நினைப்பார்கள். இதை ஒரு நாளில் சீர்திருத்திவிடலாம் என்றில்லை, ஆனால் அதை நோக்கிய பயணத்தை விஜய் உடனே தொடங்க வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | திமுகவை மட்டும் எதிர்ப்பது ஏன்...? - தவெக விஜய்யே சொன்ன விளக்கம்

மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை உயர்வு : எடப்பாடி டூ விஜய் கடும் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News