3 தொகுதிக்கும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் என்ன பிரச்னை?
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் என்ன பிரச்னை? - திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி...
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் என்ன பிரச்னை? - திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தெரிவித்தது. பின்னர் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதையடுத்து, விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என கடந்த வாரம் உச்சநீதி மன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இதில், தேர்தல் ஆணையம் மார்ச் 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும்படி எங்களை நிர்பந்திக்காதீர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வழக்கின் விசாரணை இடையே நீதிபதிகள் பேசுகையில், "இப்போதே இடைத்தேர்தலை நடத்துவதில் என்ன அவசரம் இருக்கிறது? இந்த தேர்தலுக்கு பின்னர் பொறுமையாக நடத்துவதால் என்ன பிரச்னை? தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணையம் பதிலளித்தால் மட்டுமே உத்தரவிட முடியும்" என்றும் கூறினர்.