VC Appointment Tamil Nadu: தமிழகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பாகப் பல ஆண்டுகளாக மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவி வரும் சட்டப் போராட்டத்தில், இன்று (பிப்ரவரி 4, 2026) மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு மாற்றிய தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகிய இரு நீதிபதிகள் அவசர அவசரமாக விசாரித்து தமிழக அரசின் சட்டத்தை நிறுத்தி வைத்த நிலையில், அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.
துணைவேந்தர் நியமன தடை நீங்கியது
2022-ல் தமிழக அரசு நிறைவேற்றிய 10 பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாக்களுக்கு (துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிப்பவை) ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தார். பின்னர் உச்ச நீதிமன்றத் தலையீட்டால் இவை "ஏற்றுக்கொள்ளப்பட்டதாக" (Deemed Assent) கருதப்பட்டுச் சட்டமானது.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மே 2025-ல் சென்னை உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தங்கள் தரப்பு வாதத்தை முழுமையாக கேட்காமல் சட்டத்திற்கு தடை விதித்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பல்கலைக் கழக துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரே நியமனம் செய்யும் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது. அதோடு இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்தும் உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கைத் தகுதியின் அடிப்படையில் 6 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.
சட்டத்திருத்தத்தின் அம்சங்கள் என்ன?
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தத்தின்படி, பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) ஆளுநருக்குப் பதில் முதலமைச்சர் செயல்படுவார். துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் குழுவைப் பரிந்துரைப்பதும், இறுதி நியமனம் செய்வதும் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வரும். மேலும் இது குஜராத், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்டதாகத் தமிழக அரசு கூறியது.
இடைக்காலத் தடையும் சிக்கல்களும்..
தமிழக அரசின் சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், சில சிக்கல்கள் இன்னும் விவாதத்தில் உள்ளன. அதாவது துணைவேந்தர் தேடுதல் குழுவில் (Search Committee) பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்பது கட்டாயம் என ஆளுநர் ஆர்.என்.ரவி வாதிடுகிறார். சமீபத்தில் (பிப்ரவரி 2, 2026) கூட, பாரதியார் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களில் UGC பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழு அமைப்பது செல்லாது என ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய துணைவேந்தர் நியமனம்?
ஆனாலும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கினாலும், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை புதிய துணைவேந்தர்களை நியமிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம் தமிழகத்தின் 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் தற்போது நிரந்தரத் துணைவேந்தர்கள் இல்லை. நீதிமன்றத்தின் இந்த இன்றைய உத்தரவு, இந்த முட்டுக்கட்டையை உடைப்பதற்கான ஒரு படிக்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - தமிழக அரசின் 15 அறிவிப்புகள்: அரசு வேலை தேடுபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் Good News
மேலும் படிக்க - சட்டப்பேரவையில் ஆளுநர் உரையே தேவையில்லை - முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயிண்ட்
மேலும் படிக்க - ஆளுநர் கேட்ட ஒரு கேள்வி... நறுக்குனு முதலமைச்சர் கொடுத்த பதில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









