)
Who Is CTR Nirmal Kumar: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றியிருந்தது. தற்போது விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால், 107 எம்எல்ஏக்களையே தவெக பெற்றுள்ளது.
அதேநேரத்தில், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆதரவின் காரணமாக தவெக ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் மட்டுமே தவெக உடன் அமைச்சரவையில் இடம்பெற இருக்கிறது. மற்ற கட்சியினர் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவளிப்பதாகவும், திமுக கூட்டணியில் நீடிப்பதாகவும் தெரிவித்தனற்.
முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றார். அவருடன் முதற்கட்டமாக 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இன்னும் பலர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். காங்கிரஸ் கட்சியில் இரண்டு பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இன்னும் யாருக்கும் இலாக்கா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல் தலைவரையும், கீர்த்தனா போன்ற இளம் பெண் அரசியல் தலைவரையும் தனது முதல் அமைச்சரவையிலேயே வைத்திருப்பது விஜய்யின் அரசியல் நகர்வுகள் பலரையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. தவெக அமைச்சரவையில் கவனிக்க வைக்கும் மற்றொரு நபர், சி.டி.ஆர். நிர்மல் குமார். அந்த வகையில், சி.டி.ஆர். நிர்மல் குமார் குறித்து விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த, சி.டி.ஆர். நிர்மல் குமார் எம்.ஏ., (கிரிமினாலஜி மற்றும் காவல்துறை நிர்வாகம்) படித்தவர். இவரது அரசியல் பயணத்தில் முக்கியமான ஒன்று, இவர் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் (BJP IT Wing) தலைவராக செயல்பட்டார்.
| பெயர் | சி.டி.ஆர்.நிர்மல் குமார் |
| வயது | 44 |
| சொத்து மதிப்பு | ரூ.26 கோடி |
| படிப்பு | எம்.ஏ., (கிரிமினாலஜி மற்றும் காவல்துறை நிர்வாகம்) |
| கட்சி பொறுப்பு | தவெக இணைப் பொதுச்செயலாளர் |
| குற்ற வழக்கு | 2 |
அப்போது பல்வேறு சர்ச்சைகளையும் சி.டி.ஆர் நிர்மல் குமார் சந்தித்துள்ளார். ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி மகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதும் அதில் ஒன்று. 2009ஆம் ஆண்டில் இருந்து பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்த சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆர்எஸ்எஸ் அமைப்பினருடனும் நெருக்கமாக செயலாற்றி இருக்கிறார்.

அப்படி பாஜகவுடன் பயணித்து வந்தவர், 2023ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்த பின்னர், அப்போது பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையை 420 மலை, மனநலம் குன்றியவர் என்றெல்லாம் பேசி பரபரப்பை கிளப்பினார்.
Few Unforgettable Moments In L#memories pic.twitter.com/HYXZEOoijI
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) September 1, 2021
அப்படியிருக்க, அதிமுகவிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டு ஆண்டுகளே பயணித்தார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், விசிகவில் இருந்து விலகி ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தார். அப்போது சிடிஆர் நிர்மல் குமாரும் அவருடன் தவெகவில் இணைந்தார்.
ஏற்கெனவே, விஜய்க்கு இணையத்தில் ஆதரவாளர்கள் அதிகம். ஆதவ் அர்ஜுனாவும் தனது Voice of Common தகவல் தொழில்நுட்ப அணியுடன் தவெகவில் இணைந்தார். அவருடன் நிர்மல் குமாரும் இணைந்தது தவெகவுக்கு பலத்தை அதிகரித்தது.
தவெகவின் அசூர வெற்றிக்கு களத்தில் இருந்த அதிருப்தி மட்டுமின்றி இணையத்தில் கிடைத்த வெறித்தனமான ஆதரவும் முக்கிய காரணம். மறுமுனையில்,தவெகவின் இணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை பெற்றார், அக்கட்சியின் முக்கிய தலைக்கட்டாகவும் உருவெடுத்தார். விஜய்யின் உள்வட்டத்திற்கு இடம்பெற்றார் சிடிஆர் நிர்மல் குமார்.
இவர் மதுரையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், திருப்பரங்குன்றத்தை குறிவைத்தார், சிடிஆர் நிர்மல்குமார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் வாய் திறக்காத நிலையில் (இப்போது வரை) இவரே செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது இது திமுக மற்றும் பாஜகவின் நாடகம் என்று விமர்சித்தார் அவர். திருப்பரங்குன்றம் தொகுதியை இந்தியாவே உற்றுப் பார்த்தது. திமுக, அதிமுக இங்கு நேரடியாக போட்டியிட்டன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் இருப் பெருந்திராவிடக் கட்சிகளையும் சிடிஆர் நிர்மல் குமார் வீழ்த்தினார். நிர்மல் குமார் 1,14,316 வாக்குகளை பெற்றார். திமுகவின் கிர்த்திகா தங்கப்பாண்டி 72,763 வாக்குகளையே பெற்றார். சுமார் 41 ஆயிரத்து 553 வாக்குகள் வித்தியாசத்தில் சிடிஆர் நிர்மல் குமார் வெற்றிபெற்றார்.
கடந்த முறை எம்எல்ஏவும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ராஜன் செல்லப்பா 49,865 வாக்குகளை பெற்று, 64,451 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 3வது இடத்தையே பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 14,350 வாக்குகளையே பெற்றார்.
திருப்பரங்குன்றம் போன்று தற்போது அதிகம் கவனிக்கப்படும் தொகுதியை தவெக கைப்பற்றியதற்கு சிடிஆர் நிர்மல் குமார் முக்கியமான நபர் ஆவார். எனவே, அவருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் கொடுக்கப்படும் என்பது எதிர்பார்த்ததுதான். அந்த வகையில், இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அமைச்சரவை பட்டியலில் நிர்மல் குமார் 6வது அமைச்சராக இடம்பெற்றிருந்தார். அவருக்கு மின்சாரத்துறை ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது, இன்னும் உறுதியாகவில்லை.