)
கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று நீதிமன்றம் கடுமையாக சாடி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது அதிரடி நடவடிக்கைகள் மற்றும் நேர்மையான செயல்பாடுகளால் ஏற்கெனவே பலமுறை நீதிமன்றத்தின் பாராட்டுகளை பெற்ற அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டிருப்பது இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கரூர் சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கூட்டங்களுக்கு முறையான நெறிமுறைகளை வகுக்க கோரி தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பார்க்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுவதாக குறிப்பிட்ட அவர், இது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று கடுமையாக சாடினார்.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அரசு தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கை கரூர் காவல்துறையிடமிருந்து மாற்றி, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கரூர் போலீசாருக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை பூர்வீகமாகக் கொண்ட அஸ்ரா கார்க், ஒரு பொறியியல் பட்டதாரி. சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2004ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அவர், குறுகிய காலத்திலேயே தனது செயல்திறனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2008 முதல் 2010 வரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியபோது, கந்துவட்டி கொடுமையை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது பொதுமக்களிடையே அவருக்கு பெரும் நற்பெயரை பெற்று தந்தது.

2010ல் மதுரை மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றபோது, உத்தபுரம் கிராமத்தில் தலித் மக்கள் நுழைய முடியாதபடி எழுப்பப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரை அகற்றுவதில் முக்கிய பங்காற்றினார். சமூக நீதிக்கான அவரது இந்த நடவடிக்கை, மாநிலம் முழுவதும் பெரும் பாராட்டுகளை பெற்றது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, குற்றவாளிகளை கண்டறிந்தார். 2021ல் மதுரையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்ததற்காக உயர்நீதிமன்றத்தால் நேரடியாக பாராட்டப்பட்டார். இப்படி பல சவாலான வழக்குகளைதிறம்படக் கையாண்ட அனுபவமும், நேர்மையான அதிகாரி என்ற பெயரும் கொண்ட ஐ.ஜி. அஸ்ரா கார்க், கரூர் துயர சம்பவத்தின் விசாரணையை முன்னெடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ