CM MK Stalin: மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என மத்திய அரசை குற்றஞ்சாட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tamil Nadu CM MK Stalin: 2021ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அப்போது கொரோனா காரணமாக மத்திய அரசால் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. குறிப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
MK Stalin: 'ஆபத்து வாசற்படி வரை வந்துவிட்டது'
இந்நிலையில் வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census Of India 2027) நடைமுறை தொடங்கும் என்றும் மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) அவரது X பக்கத்தில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என்றும் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.
MK Stalin: தண்டிக்கப்பட இருக்கும் தென்மாநிலங்கள்
மேலும் அந்த பதிவில், "ஒன்றிய பாஜக அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்த உள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது.
— M.K.Stalin (@mkstalin) June 6, 2025
ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள…
அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.
MK Stalin: வியூகங்களை தீட்ட வேண்டிய தருணம்
இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், பாஜக எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது.
1971ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு (Delimitation), அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பாஜக நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்.
MK Stalin: சட்டத் திருத்தம் வேண்டும்...!
தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே!
பிரிவு 370 சட்டப்பிரிவை நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் இலட்சணம் புரிந்துவிடும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
MK Stalin: வளர்ச்சி அடைந்ததற்காக தண்டனையா...?
2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். அதிமுக போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பாஜக முன் மண்டியிட்டாலும், திமுகவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்! நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ