)
Tamil Nadu Politics Latest News: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கேட்டு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிர ஆலோசனைக்கு பின்னர் தங்களது முடிவை தெரிவித்திருக்கின்றனர். அக்கட்சியின் தலைவர் திருமாவளவனின் நேரில் சென்று ஆதவ் அர்ஜுனா ஆதரவு கடிதம் பெற்றார். இதையடுத்து சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகம் வந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தவெகவிற்கு ஆதரவு அளித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்களை விளக்கி இருக்கிறாது.
இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், "நாங்கள் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல் இடதுசாரி கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. மக்கள் நலக் கூட்டணி உருவான காலத்திலிருந்தே கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை கருத்தில் கொண்டு, இடதுசாரி கட்சிகளும் விசிகவும் எதிர்கால அரசியல் சூழலை மனதில் வைத்து இணைந்து முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன்படியே முன்பே எங்கள் நிலைப்பாட்டை அறிவித்திருந்தோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது மாநிலக் குழுக் கூட்டங்களில் எடுத்த முடிவுகளின் அடிப்படையில், அதேபோல் விசிக உயர்நிலைக் குழுவிலும் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை அறிவிக்க திட்டமிட்டிருந்தோம். அதன்படி நேற்று மாலை ஜூம் வாயிலாக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் முடிவில், இறுதி தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவருக்கு வழங்கப்படுகிறது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரக்கூடாது என்பதையும், அதனைத் தடுக்க வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். மேலும், 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் தவெக சிக்கலில் இருந்ததால், அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
மொத்தத்தில் இரண்டு காரணங்களுக்காகவே இந்த ஆதரவை வழங்கியுள்ளோம். ஒன்று, தவெக ஆட்சி அமைப்பதில் விசிக தடையாக இருக்கக் கூடாது. மற்றொன்று, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது. ஆட்சி அமைப்பதற்காக மட்டுமே வெளியில் இருந்து எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம்" என தெரிவித்தார்.