கன்யாகுமரி மாவட்டத்தில் புயல் தாக்கியதையடுத்து மக்களை பாதுகாக்கும் பணியில் அரசு வேகமாக செயல் படவேண்டும் என்று இன்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது;
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாமல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், மரங்களும் சாலைகளில் சரிந்து கிடக்கின்றன. எனவே, கடந்த 48 மணி நேரமாக மின்சாரம் முழுமையாகத் தடைப்பட்டுள்ளது; போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. ரப்பர் தோட்டங்கள். வாழை, தென்னை, கரும்புத் தோட்டங்கள், நெல் வயல்கள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.மழையால் 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கொடுமுடியாறு, சேர்வலாறு, கடனா அணை, பாபநாசம் அணை திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்களும், கண்மாய்களும் நிரம்பி மறுகால் பாய்கிறது. பல குளங்கள் உடையும் அபாய நிலையில் உள்ளன. மீனவர்கள், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் முழுமையாக வேலை இழந்துள்ளனர்.
எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும், மேலும் உயிர் இழப்புகள் ஏற்படாத வகையில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
கரையோரப் பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு, உடை வழங்க வேண்டும்; தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும்; பயிர் காப்பீட்டு செய்தோர், காப்பீடு செய்யாதோர் என்ற பேதமின்றி அனைத்து விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கிட வேண்டும்; பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும்; வீடுகளை இழந்தோருக்கும், கால்நடைகளை இழந்தோருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்; உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 இலட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதுடன், மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் தத்தமது பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு வேண்டுகிறேன்.
என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.