)
Google Alert Before Venezuela Earthquake: புதன்கிழமை வெனிசுலாவில் இரண்டு சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டபோது, சில ஆண்ட்ராய்டு பயனர்கள் நிலம் அதிர்வதை உணர்வதற்கு முன்பே கூகிள் எச்சரிக்கையைப் பெற்றனர். இந்த அறிவிப்புகள் பலரையும் ஆச்சரியப்படுத்தின. 'பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பே அது வரப்போகிறது என்பதை கூகிளால் எப்படி அறிய முடிந்தது?' என்ற கேள்வி பலரை ஆட்டிப்படைத்தது.
இதற்கான பதில் பில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன்களுக்குள் உள்ளது. கூகிளின் ஆண்ட்ராய்டு பூகம்ப எச்சரிக்கை அமைப்பு, இணக்கமான ஆண்ட்ராய்டு சாதனங்களை ஒரு உலகளாவிய பூகம்ப கண்டறிதல் வலையமைப்பாக மாற்றுகிறது. இது பூகம்பத்தின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டு நொடிகளில் எச்சரிக்கைகளை அனுப்பும் திறன் கொண்டது.
இதன் இரகசியம் என்னவென்றால், பூகம்பங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வருவதில்லை. அவை வெவ்வேறு வகையான நில அதிர்வு அலைகளாகப் பயணிக்கின்றன.
P-wave: முதலாவது முதன்மை அலைகள், அல்லது பி-அலைகள். இவை வினாடிக்கு சுமார் 6 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன, ஆனால் பொதுவாக சிறிய சேதத்தையே ஏற்படுத்துகின்றன.
S-waves: இரண்டாவது இரண்டாம் நிலை அலைகள், அல்லது எஸ்-அலைகள். இவை வினாடிக்கு சுமார் 3 முதல் 4 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாகப் பயணிக்கின்றன. ஆனால் மக்கள் அனுபவிக்கும் பெரும்பாலான வலுவான அதிர்வுகளுக்கு இவையே காரணமாகின்றன.
ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் வேகமான P-அலைகளை முதலில் கண்டறிகின்றன. பின்னர் அந்த எச்சரிக்கை, மொபைல் அல்லது இணைய வலையமைப்புகள் வழியாக ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் பயணிக்கிறது. இதனால், மெதுவான மற்றும் அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய S-அலைகள் அருகிலுள்ள பகுதிகளைச் சென்றடைவதற்கு முன்பே, கூகிளின் சேவையகங்கள் அந்தத் தரவைப் பகுப்பாய்வு செய்து எச்சரிக்கைகளை அனுப்புகின்றன.
கூகிள் இந்த அமைப்பின் செயல்பாட்டை அழகாக விளக்குகிறது. இந்த அமைப்பு அடிப்படையில் "ஒரு பூகம்பத்தின் வேகத்திற்கும் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் கூகிள் எச்சரிக்கை செய்திக்கும் இடையிலான பந்தயம்" என்று கூகிள் கூறுகிறது.
வெனிசுலா 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவு கொண்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டது. நிலநடுக்க அதிர்வை உணர்வதற்குச் சற்று முன்பு கூகுள் (Google) அனுப்பிய எச்சரிக்கை அறிவிப்புகளைக் காட்டும் screenshots-களை சில பயனர்கள் பின்னர் பகிர்ந்துகொண்டனர்.
ஒரு எச்சரிக்கை அறிவிப்பு, சுமார் 341 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தது. இது, கடுமையான அதிர்வுகள் ஏற்படுவதற்கு முன் பயனர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள சில மிக முக்கியமான நொடிகளை வழங்கியது.
எச்சரிக்கை நேரம் பொதுவாகக் குறைவாக இருந்தாலும், சில நொடிகள் கூட ஆபத்தான பொருட்களிலிருந்து விலகிச் செல்லவோ, வாகன ஓட்டுவதை நிறுத்தவோ அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ மக்களுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் இரண்டு வெவ்வேறு நிலைகளில் எச்சரிக்கைகளை வழங்குகிறது.
1. Be Aware Alert: விழிப்புடன் இருப்பதற்கான எச்சரிக்கை
இது லேசான அதிர்வுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பயனர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வழங்குகிறது.
2. Take Action Alert: நடவடிக்கை எடுப்பதற்கான எச்சரிக்கை
மிதமான அல்லது கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்காக இது ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் உடனடியாகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஊக்குவிக்கிறது.
மொபைலில் வரும் இந்த அறிவிப்புகளில் (நோடிஃபிகேஷன்) எதை திறந்தாலும், பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், நிலநடுக்கத்தின் மதிப்பிடப்பட்ட அளவு, நிலநடுக்க மையம் (epicentre) அமைந்துள்ள இடம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியின் வரைபடம் ஆகியவை காட்டப்படும்.
கூகிள் நிலநடுக்க எச்சரிக்கை உண்மையில் எதைக் குறிக்கிறது என்பதை நிஜ உலக உதாரணங்கள் தெளிவாக விளக்குகின்றன.
| நவம்பர் 2023-ல் பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் நிலநடுக்கம் | நிலநடுக்கம் தொடங்கிய 18.3 வினாடிகளுக்குப் பிறகு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் நிலநடுக்க மையத்திற்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு 15 வினாடிகள் வரையிலும், தொலைவில் இருந்தவர்களுக்கு ஒரு நிமிடம் வரையிலும் முன்னெச்சரிக்கை நேரம் கிடைத்தது. ஏறக்குறைய 25 லட்சம் மக்கள் எச்சரிக்கப்பட்டனர். |
| நேபாளத்தில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் | 15.6 வினாடிகளில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதில் 10 முதல் 60 வினாடிகள் வரையிலான முன்னெச்சரிக்கை நேரம் கிடைத்தது. |
| ஏப்ரல் 2025-ல் துருக்கியில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கஏப்ரல் 2025-ல் துருக்கியில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் | வெறும் 8 வினாடிகளிலேயே முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. |
ஆம், ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் சாதனங்களுக்காக 2023-ல் இந்தியாவில் 'ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பை' (Android Earthquake Alerts System) கூகுள் அறிமுகப்படுத்தியது.
கூகுளைப் பொறுத்தவரை, அவை உலகின் மிகப்பெரிய நிகழ்நேர நிலநடுக்க எச்சரிக்கை அமைப்புகளில் ஒன்றை உருவாக்க உதவுகின்றன. கூகிளின் இந்த எச்சரிக்கை அறிவிப்புகள், பேரிடர் ஏற்படுவதற்கு முன் லட்சக்கணக்கான மக்களுக்கு விலைமதிப்பற்ற கூடுதல் நொடிகளை வழங்கும் திறன் கொண்டதாக உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.