)
H-1B Visa: அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என கனவு கண்டுவரும் இந்திய இளைஞர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் செய்தி இன்று வெளியானது. வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய பிரகடனத்தில் கையெழுத்திட்டதே அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களுக்கும் பெருங்கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அதிஉயர் திறன் பெற்ற வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவில் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இனி வருடாந்திர விசா கட்டணமாக 1 லட்சம் அமெரிக்க டாலரை (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், H-1B விசா போன்ற பல்வேறு வகையான அமெரிக்க விசாக்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. தற்போதைக்கு விசா கட்டணம் ஒரு விண்ணப்பத்திற்கு 2 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.1.76 லட்சம்) முதல் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.4.40 லட்சம்) வரை இருந்தது. இதனால் முதல் மூன்றுக்கு வருடங்களுக்கு அதிகபட்சமாக ரூ.13.20 லட்சம் வரை செலவானது. ஆனால் தற்போதைய கட்டண உயர்வின்படி பார்த்தால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.2.64 கோடி செலவாகும் என்பதுதான் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவத்துறை மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தியர்களை தங்கள் நாட்டில் பணியமர்த்த H-1B விசாவுக்கே அதிகம் விண்ணப்பிப்பார்கள். தற்போது H-1B விசா வைத்திருப்பவர்களில் இந்தியர்கள்தான் அதிகம், அதாவது H-1B விசா வைத்திருப்பவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள். தொழில்நுட்பத் துறையில் சுமார் 3 லட்ச உயர் திறமையான தொழிலாளர்கள் H-1B விசா அந்தஸ்தை பெற்றுள்ளனர்.
தற்போது விசாவுக்கான கட்டணம் உயர்ந்திருப்பதால், இந்தியர்களை பணியமர்த்த நினைக்கும் நிறுவனங்களின் செலவீனங்களும் பல மடங்கு அதிகமாகும். இதனால், அமெரிக்காவில் இந்தியர்களுக்கான வாய்ப்பும் குறையலாம். இது அமெரிக்காவில் H-1B விசா அந்தஸ்தில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்கும் அழுத்தத்தை உருவாக்கும்.
முதலில் H-1B விசா என்றால் என்ன என்று பார்க்கலாம். H-1B விசா என்பது அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வெளிநாட்டு நபருக்கு தற்காலிகமாக வேலை கிடைத்திருக்கும்பட்சத்தில், அந்த நபருக்கு H-1B அந்தஸ்து கொடுக்கப்படும். அவர் இளநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கும் மேலான படிப்பை படித்திருக்க வேண்டும். H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க ஒரு நபருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச கல்வித்தகுதி இதுதான்.
H-1B என்பது அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறாத ஊழியர்களுக்கான விசா ஆகும், இதேபோல் பல்வேறு விசாக்கள் இருக்கின்றன. அமெரிக்க முதலாளிகள் சிறப்புத் தொழில்களில் வெளிநாட்டு தொழிலாளர்களையும், ஃபேஷன் மாடல்கள் மற்றும் பாதுகாப்புத் துறை திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களையும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பணியமர்த்திக்கொள்ள இந்த விசா அனுமதிக்கிறது..
விசா திட்டங்களை ஒழுங்குபடுத்துவதும், அதை செயல்படுத்துவதும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் அங்மான அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டினர் அமெரிக்காவில் இருக்கும்போது H-1B அந்தஸ்தைப் பெற்றிருக்கலாம். H-1B விசா முத்திரை இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். H-1B விசா அந்தஸ்தை பெற்றவர்கள் முதலில் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் இருக்கும். அதிகபட்சம் அவர்கள் H-1B அந்தஸ்துடன் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் வசிக்கலாம்.
வருடந்தோறும் மொத்தம் 65 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும். கூடுதலாக 20 ஆயிரம் தனிநபர்களுக்கு H-1B விசா வழங்கப்படும். அதாவது, அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுநிலை கல்வி அல்லது அதற்கும் மேலான கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு H-1B வழங்கப்படுகிறு. அதாவது, ஓராண்டுக்கு மொத்தம் 85 ஆயிரம் பேருக்கு மட்டும் H-1B விசா வழங்கப்படும்.
H-1B விசா கட்டண உயர்வு குடும்பங்களுக்கு இடையூறு விளைவிப்பதன் மூலம் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் இந்த கட்டண உயர்வின் தாக்கங்களை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது என்றும் இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிகாரிகள் இந்த விஷயத்தை கவனித்துக்கொள்வார்கள் என நம்புகிறோம் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ