Israel Iran Conflict: ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இஸ்ரேலுடன் இந்த போரில் அமெரிக்காவும் கைக்கோர்ப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார்.
இதுகுறித்து Truth சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டுள்ள பதிவில், "ஈரானில் உள்ள ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் எஸ்பஹான் (Esfahan) உள்ளிட்ட மூன்று அணுஉலைகள் மீது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் நடத்தி முடித்துள்ளோம்.
Donald Trump: 'இது அமைதிக்கான நேரம்...'
இப்போது அனைத்து போர் விமானங்களும் ஈரானின் வான்வெளியில் இருந்து வெளியேறிவிட்டன. ஈரானின் முதன்மை தளமான ஃபோர்டோவில் (Fordow) அதிகளவில் குண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்பின. நமது சிறப்பான அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் வேறு எந்த ராணுவத்தாலும் இதைச் செய்திருக்கவே முடியாது. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் அனைவரின் கவனத்திற்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.
Donald Trump: 'வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்'
இதைத் தொடர்ந்து மற்றொரு பதிவில், "ஈரானில் நமது மிகவும் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகையில் இரவு 10:00 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு) நாட்டு மக்களுக்கு உரையாற்றுவேன். இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். நன்றி" என பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் - ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெரிவிக்க 2 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (ஜூன் 20) தெரிவித்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேல் உடன் இந்த போரில் கைக்கோர்த்திருப்பதை உலகிற்கே அறிவித்துவிட்டார்.
Israel Iran Conflict: அமெரிக்கா பயன்படுத்தி B-2 குண்டுவீச்சு விமானம்...
ஈரானின் மூன்று அணுஉலைகள் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா அதன் B-2 குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் அளித்ததாக Reuters செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.பசிபிக் தீவான குவாமுக்கு அமெரிக்கா B-2 குண்டுவீச்சு விமானங்களை நகர்த்துவதாக நேற்று Reuters செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆழமான மற்றும் நிலத்திற்கு அடியிலும் இருக்கும் இலக்குகளை அழிக்க வடிவமைக்கப்பட்ட சுமார் 13,600 கிலோ கொண்ட GBU-57 குண்டை சுமந்து செல்லும் திறன் B-2 விமானத்திற்கு உண்டு. ஃபோர்டோ உட்பட ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது இதன்மூலமே அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Israel Iran Conflict: உச்சக்கடத்தில் இஸ்ரேல் - ஈரான் மோதல்
இஸ்ரேலிய ராணுவத்தினரின் "ஆபரேஷன் ரைஸ்ஸிங் லயன்" மூலம் இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான இந்த போர் தாக்குதல் தொடங்கியது எனலாம். இந்த நடவடிக்கையின் மூலம் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ பகுதிகளில் தாக்குதல் மேற்கொண்டது. இதில் உயர் ராணுவ அதிகாரிகள், அணுசக்தி சார்ந்த விஞ்ஞானிகள் பலரும் குறிவைத்து தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகவும் அதை தாங்கள் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறியது.
இந்த தாக்குதலில் குறைந்தது 657 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 263 பேர் பொதுமக்கள் அடக்கம் என்றும் கூறப்படுகிறது. மேலும், சுமார் 2000க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் 450 ஏவுகணைகள் மற்றும் 1,000 ட்ரோன்களை ஏவி தாக்குதல் தொடுத்ததாகவும், அதில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஆயுதக் கிடங்கின் அச்சுறுத்தல்களை அகற்ற ஈரானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரும் என்று இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
Israel Iran Conflict: பதுங்கு குழியில் கமேனி
கடந்த ஜூன் 13ஆம் தேதியில் இருந்து இஸ்ரேல் உடனான மோதல் தொடங்கியதில் இருந்து ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆழமான பதுங்கு குழியில் மறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒருவேளை அவர் இந்த தாக்குதல்களில் உயிரிழந்தால் ஈரானின் அடுத்த உச்ச தலைவர் பொறுப்புக்கு 3 பேரை அவர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
மேலும் அவர் தன்னைக் கண்டுபிடிப்பதை கடினமாக்கும் வகையில், தன்னைச் சுற்றியுள்ள அனைத்து மின்னணு தகவல்தொடர்புகளையும் முடக்குமாறு கமேனி ஈரான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கமேனியின் அவசரகால போர்த் திட்டங்களை நன்கு அறிந்த மூன்று ஈரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி The New York Times நாளிதழ் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இஸ்ரேல் - ஈரான் போர் குறித்த முழு பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் படிக்க | ஈரான் விஷயத்தில் முஸ்லிம் உம்மா ஏன் ஒன்றுபடவில்லை? ஈரானின் வரலாறு.. அஞ்சும் நாடுகள்
மேலும் படிக்க | போர் நிறுத்தத்தைக் கோரியது யார்? பாகிஸ்தான் துணை பிரதமர் முதல் முறை ஒப்புதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ