முதன் முதலாக கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த டாக்டர் லீ வென்லியாங் வைரஸ் தாக்குதல் காரணமாக நேற்று உயிரிழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது. 


கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 65 பேர் உயிர் இழந்துள்ளனர். புதிதாக, 3,887 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை, 24 ஆயிரத்து, 324 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3,219 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர். நாட்டில் உள்ள, 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது.


சீனாவுக்கு சென்று திரும்பியவர்கள் மூலமே, இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கேரளாவைச் சேர்ந்த, சீனாவின் வூஹானில் மருத்துவம் படித்து வரும் மூன்று மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிவரும் வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, அனைத்து நாடுகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, உலக வங்கி கூறியுள்ளது. மேலும்  சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படுமா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என, உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளது.


சீனாவின் வுகான் நகர ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அந்த ஆஸ்பத்திரி டாக்டர் லீ வென்லியாங் தனது கல்லூரி தோழர்களான இதர டாக்டர்களுக்கு ‘விசாட்’ செயலி மூலம் விரிவான தகவல் அனுப்பி எச்சரித்தார். டாக்டர் லீயின் இந்த தகவல் அந்த வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இதனால் சீன போலீசார் வதந்தி பரப்புவதாக கூறி டாக்டர் லீ உள்பட சிலர் மீது குற்றம்சாட்டினர்.


இந்நிலையில் தற்போது டாக்டர் லீயையும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.