ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய விமான தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தாக்குதலில் ஹசீத் கிளர்ச்சியாளர் குழுவின் கமாண்டர் அபு மஹ்தி அல் முகந்தீசும் கொல்லப்பட்டார் என கூறப்படுகிறது. ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பு இருவரின் இறுப்பு குறித்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளது. 
இவர்கள் இருவரும் சென்ற வாகனத்தை குறிவைத்து, அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்குதல் நடத்தினர். தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், வெளிநாடுகளில், அமெரிக்கர்களின் நலனை காக்கும் வகையில், அதிபர் டிரம்ப் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட காசிம் சுலைமானி கொல்லப்பட்டார் என தெரிவித்தனர். ஈராக் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த சுலைமானி திட்டமிட்டிருந்தார் எனவும், இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் அவர் தற்போது கொல்லப்பட்டார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.