Myanmar Earthquake 700 Muslims Killed : மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்த செய்திகள், மனதை பதைபதைக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்ததாக கூறப்படுகிறது.
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மியன்மரில், கடந்த மார்ச் 28ஆம் தேதியன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், பெரிய பெரிய கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கி இடிந்து விழுந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மனதை பதைபதைக்க செய்தது. மியான்மர் நாட்டின் 2வது பெரிய நகரமாக கருதப்படும் மண்டலாயில் தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலின் படி முதல் நிலநடுக்கம் 7.7ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 6.4 புள்ளி அளவாகவும் இருந்தது.இந்த பேரிடர் ஏற்படுத்திய நிலநடுக்கத்தால் மியான்மரின் ஏராளமான வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. அது மட்டுமன்றி, அந்நகரில் இருந்த விமான நிலையமும் பெரும் சேதமடைந்தது. அந்த நாட்டில் இருக்கும் சாலைகளும், பாலங்களும் இடிந்து விழுந்தன.
700 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
கடந்த வெள்ளியன்று, மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிருடன் மண்ணில் புதைந்து உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரமலான் மாதத்தை முன்னிட்டு, இவர்கள் அனைவரும் வெள்ளியன்று தொழுகையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் அனைவரும் இதில் சிக்கி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரமலான் பண்டிகை தினத்தில் இப்படியொரு செய்தி வந்திருப்பது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த உயிரிழப்புகள் குறித்து, மியான்மரின் முஸ்லீம் கமிட்டியை சேர்ந்த துன் கி என்பவர் கூறுகையில், நிலநடுக்கத்தால் மியான்மரில் உள்ள 60 மசூதிகள் சேதமடைந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் தரை மட்டமாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த மசூதி கட்டடங்களில் பல பழைமையானவை என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த 700 உயிரிழப்புகளும், அதிகாரப்பூர்வ உயிரிழப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனவா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் கூறினார்.
பலி எண்ணிக்கை உயர்வு!!
மியான்மரில் மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 1,700 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில், 3,400 பேர் காயமடைந்திருக்கின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த பலி எண்ணிக்கை இன்னமும் உயரலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மர் நாட்டின் தலைநகரங்களான நேபிடோ மற்றும் மண்டலாய் ஆகிய நகரங்கள் அடையாளம் தெரியாமல் உருகுலைந்து போயுள்ளன.
உதவிக்கரம் நீட்டிய நாடுகள்..
நிலநடுக்கத்தால் பல உயிர்களை பலிகொடுத்த மியான்மர் நாட்டிற்கு, இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் இந்த நாட்டின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மியான்மர், தாய்லாந்து நாடுகளில் நிலநடுக்கத்தின் கோர காட்சிகள்
மேலும் படிக்க | சுனாமி எச்சரிக்கை! டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... தொடரும் சோகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ