)
Israel Iran War: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய திருப்பத்தை எடுத்து வருகின்றது. இந்த போரில் அமெரிக்கா நுழைந்தது, இதற்கு ஒரு புதிய கோணத்தை அளித்தது. ஈரான் அணுசக்தி தளங்கள் மீது நடந்த அமெரிக்க தாக்குதல்களை அடுத்து அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
போர் நிறுத்தத்தை அறிவித்த டிரம்ப்
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே, தெஹ்ரான் புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன. தெஹ்ரானில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு ஈரான் தாக்குதல்களை நிறுத்துவதாக வாக்குறுதி அளித்த பின்னர் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.
மூக்கை நுழைத்து முழிக்கும் அமெரிக்கா
ஈரானை லேசாக எடுத்துக்கொண்டு இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதல் நடத்திய அமெரிக்காவை ஈரானின் பதில் தாக்குதல் கலங்கச் செய்துள்ளது. வழக்கம் போல் மூக்கை நுழைத்து, பேர் வாங்கும் எண்ணத்துடன் நுழைந்த டிரம்ப் இப்போது போர் நிறுத்தத்திற்கு வக்காளத்து வாங்குகிறார். தான் நினைத்ததை விட ஈரானின் உறுதி அதிகமாக இருப்பதை உணர்ந்த டிரம்ப் வம்பு வேண்டாம் என அமைதிக்கான முகமூடியை போர்த்திக்கொண்டதாக உலக அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
தெஹ்ரானில் உள்ள மொபைல் போன்களில் எச்சரிக்கைகள் ஒலிக்கத் தொடங்கியதாகவும் சைரன்களும் ஒலித்ததாகவும் அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை கூறுகிறது. பொதுமக்கள் தங்குமிடங்களுக்குத் திரும்புமாறு வலியுறுத்தப்பட்டனர். ஜெருசலேம் மீது வானில் குறைந்தது ஒரு ஏவுகணை இடைமறிப்பாவது ஏற்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய தாக்குதல்களுக்கு சற்று முன்பு, ஈரானிடமிருந்து மேலும் எந்த ஆக்கிரமிப்பும் எதிர்பார்க்கப்படாததால், குடிமக்கள் தங்கள் அவசரகால தங்குமிடங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேலின் எல்லையை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை ஐடிஎஃப் அடையாளம் கண்டுள்ளது. அச்சுறுத்தலைத் தடுக்க தற்காப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. எச்சரிக்கையைப் பெற்றவுடன், பொதுமக்கள் பாதுகாக்கப்பான இடங்களுக்கு சென்று மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளிப்படையான உத்தரவு வந்தால் மட்டுமே பாதுகாப்பான இடங்களிய விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறது. ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிமுறைகளைப் பின்பற்றுவதைத் தொடரவும்," என ஐடிஎஃப் தெரிவித்தது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தத்தை அறிவித்தார். இதன் பிறகு 12 நாட்கள் தொடர்ந்த பதற்றமான போர் சூழல் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. இந்த போர் சூழல் காரணமாக லட்சக்கணக்கானவர்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், இந்த பிராந்தியத்தில் பதற்றம் இன்னும் அதிகரிக்கும் என்ற கவலையும் அச்சமும் மக்களை ஆட்கொண்டது.
வார இறுதியில் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. தெஹ்ரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் திறனை நெருங்கி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
போர் நிறுத்தத்தை அறிவித்த அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால், "THE 12 DAY WAR", அதாவது 12 நாட்கள் தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் இரு நாடுகளின் சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் உளவுத்துறைக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார். முன்னதாக ஒரு ஈரானிய அதிகாரி தெஹ்ரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக உறுதிப்படுத்தினார். எனினும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும்வரை போர் நிற்காது என வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை" நிறுத்தினால், அதன் பின்னர் ஈரான் தனது பதில் தாக்குதல்களியத் தொடராது என்று அப்பாஸ் அரக்சி கூறினார்.
அந்த நேரத்திலிருந்து ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் எதுவும் பதிவாகவில்லை. இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று அரக்சி மேலும் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் செய்த மத்யஸ்தம்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் டிரம்ப் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாகவும், ஈரான் மேலும் தாக்குதல்களை நடத்தாமல் இருந்தால், போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போர்நிறுத்தம் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்றும், தற்போதைய பணிகளையும் முடிக்க நேரம் கொடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு, ஈரானின் அணு ஆயுத முயற்சிகள் ஒரு பெரிய காரணமாக கூறப்பட்டது. ஆனால், ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை மறுக்கிறது. எனினும், ஈரான் அத்தகைய ஆயுதங்களை உருவாக்க விரும்பினால், உலகத் தலைவர்களால் அதைத் தடுக்க முடியாது என்று ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ