இந்தியா பாகிஸ்தான் பிரச்னை லேட்டஸ்ட் செய்திகள்: ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டில் போர் வெடித்தது, இன்னும் இந்த போர் முழுமையாக முடியவில்லை. அதேபோல், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரிலும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
இந்தச் சூழலில், இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து கடந்த பிப். 28ஆம் தேதி முதல் ஈரான் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது, போர் நிறுத்த அறிகுறியே தற்சமயம் வரை தெரியவில்லை. இதற்கிடையே, கடந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. ஏப்ரல் மாதத்தில் பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த நிலையில், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா தாக்கியது. இதைத் தொடர்ந்து சுமார் நான்கு நாள்களுக்கு இரு நாடுகளிலும் போர் பதற்றம் நிலவியது, மே 10ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்
அதன்பின்னர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அமைதி நிலவும் வேளையில், தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னை துளிர்விட்டுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தானியர்கள் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய கிழக்கு போர் காரணமாக, எல்பிஜி விலைகளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன. இந்தச் சூழலில் கூட இந்தியாவை சீண்டுவதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை.
கொல்கத்தாவை தாக்குவோம்
ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "இந்த முறை இந்தியா எங்களை கட்டுப்படுத்த நினைத்தாலோ, ஏதேனும் (ராணுவ) நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்தாலோ, நாங்கள் கொல்கத்தாவை தாக்குவோம்" என பேசி உள்ளார். இந்தியா தங்களை தாக்க தயாராகி வருவதாக தகவல்கள் வருவதாக கூறிய ஆசிப், இத்தகைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார். இது சர்வதேச அளவில் மேலும் பதற்றங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
ஆதாரங்கள் ஏதுமில்லை
குறிப்பாக, "அவர்கள் (இந்தியா) தங்களின் சொந்த நாட்டினர் மூலமாகவோ அல்லது பாகிஸ்தானியர்கள் மூலமாகவோ ஒரு போலியான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடுகிறார்கள். அதிலும், சில பிரதேங்களை எங்காவது வைத்து, 'அவர்கள் பயங்கரவாதிகள், அவர்கள்தான் பயங்கரவாத செயல்களை செய்தார்கள்' என கூறுவார்கள்" என பேசியிருக்கிறார். இருப்பினும் தனது கூற்றை நிரூபிக்கும் வகையில் கவாஜா ஆசிப் எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இந்தியா தாக்குதல் நடத்த முயற்சித்தால், பாகிஸ்தானின் பதிலடி தாக்குதல் உடனடியாகவும், நன்கு திட்டமிடப்பட்டதாகவும், தீர்க்கமானதாகவும் இருக்கும் என ஆசிப் பேசியிருக்கிறார்.
திடீரென கவாஜா ஆசிப் பேசியது ஏன்?
முன்னதாக, பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு சாகச் செயலுக்கும், முன்னெப்போதும் இல்லாத, தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ராஜ்நாத் சிங் பேசியது என்ன?
கேரளம் மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த 'சைனிக் சம்மான் சம்மேளன்' நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய படைகள் வெறும் 22 நிமிடங்களில் பாகிஸ்தான் மண்யிடச் செய்யும் அளவிற்கு தாக்குதல் நடத்தியது" என்றார்.
மேலும், பயங்கரவாத்திற்கு எதிராக இந்திய ராணுவ வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர் என பேசினார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்றும் எல்லை தாண்டி ஏதேனும் அத்துமீறல் நடக்கும்பட்சத்தில், அதற்கு தகுந்த பதிலடி மட்டுமின்றி, முன்னெப்போதும் இல்லாத அளவிலான தாக்குதல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் பேசியிருந்தது நினைவுக்கூரத்தக்கது. கேரளாவில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சட்டுனு ஏறிய பெட்ரோல், டீசல் விலை... உடனே குறைத்த பாக்., பிரதமர் - மக்கள் நிம்மதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









