Pakistan Petrol, Diesel Price: இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும், கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியால் வரும் பிரச்னை
கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயத்தில் உள்ளன. இந்தியாவை பொருத்தவரை LPG தட்டுபாடும் நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியின் வழியாக இந்தியாவுக்கு கப்பல்கள் வருவதால் தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது, இன்னும் 17 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
80 ரூபாயை குறைத்த பாகிஸ்தான்
இந்தச் சூழலில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் அதன் மக்களுக்கு பெட்ரோல் விலையில் நிவாரணம் அளித்துள்ளது. பெட்ரோல் விலை பாகிஸ்தானில் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80 பாகிஸ்தானிய ரூபாய் குறைந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று வெளியிட்டார். பெட்ரோல் மீதான வரியை குறைத்ததன் மூலம் மக்களுக்கு இந்த நிவாரணத்தை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பெட்ரோல், டீசல் விலை
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக பாகிஸ்தானில் நுகர்வோர் வாங்கும் எரிபொருகள்களின் விலை கடுமையாக உயர்ந்தன. டீசல் விலை 54.9% உயர்ந்து, அதாவது, பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் 520.35 என விற்பனையானது. பெட்ரோல் விலையும் 42.7% அளவுக்கு உயர்ந்து, பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் 458.40 ஆக விற்பனையானது. இந்த விலை ஏற்றத்திற்கு மறுநாளே, மக்களிடம் இருந்து கடும் அதிருப்தி வெளியானது. அதைத் தொடர்ந்து ஓரளவு விலையை குறைத்து பாகிஸ்தான் அரசு நிவாரணம் அளித்துள்ளது.
விலை உயர்வின் பின்னணி
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் அலி பெர்வைஸ் மாலிக் பேசியிருந்தார். பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி சேனலில், நிதி அமைச்சர் முகமது ஔரங்கசீப் உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அலி பெர்வைஸ் மாலி, "அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தை விலைகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், விலைகளை உயர்த்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது" என தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா - இஸ்ரேல் போருடன் தொடர்புடைய உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை காரணமாக கூறி, பாகிஸ்தான் ஏற்கெனவே டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை சுமார் 20% உயர்த்தியிருந்த நிலையில், கடந்த மாதம் விலை உயர்வு ஏற்பட்டது. சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் இறக்குமதியை பாகிஸ்தான் பெரிதும் நம்பியிருக்கிறது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களால் பாகிஸ்தானும் பாதிக்கப்படக்கூடியதாக இருந்து வருகிறது.
மக்களுக்கு ஓரளவு நிவாரணம்
பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அங்கு மக்கள் மத்தியில் போராட்டம் வெடிக்க வழிவகுத்தன. மேலும் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்தன. ஈரான் போருக்கு முன்னதாகவே, பாகிஸ்தான் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவித்தது. தற்போது இந்த விலையேற்றம் மக்கள் மீதான சுமையை அதிகரித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
மக்கள் மீதான சுமையை குறைக்கும் விதமாக, சில நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு லிட்டருக்கு 100 பாகிஸ்தானிய ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் இது மூன்று மாத காலத்திற்கு 20 லிட்டர் அளவுக்கு மட்டும் மானியம் வழங்கப்படும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | டிரம்ப் சொன்ன ஒரே வார்த்தை... தங்கம் விலை வீழ்ச்சி - அடுத்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









