)
Japan Twitter Killer Executed: சீரியல் கில்லர்கள், சைக்கோ கில்லர்கள், என்ற பெயரில் பல்வேறு கொலையாளிகளை நீங்கள் படங்களில், வெப் சீரிஸ்களில் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில், 'ட்விட்டர் கில்லர்' என்றழைக்கப்படும் கொலையாளி 2017ஆம் ஆண்டில் 9 பேரை கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் கில்லர் குறித்து இங்கு காணலாம்.
Japan Twitter Killer: யார் இந்த 'ட்விட்டர் கில்லர்'?
ஜப்பானின் தகாஹிரோ ஷிரைஷி (34) என்பவர் தான் இந்த ட்விட்டர் கில்லர். இவர் சமூக வலைதளங்களில் 15 வயது முதல் 26 வயது வரை உள்ள பெண்களை மயக்கி இவரது வீட்டுக்கு வரவழைப்பாராம். வீட்டுக்கு வரவழைத்து அங்கு அவரை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிவிடுவாராம்.
Japan Twitter Killer: 9 பேரை கொன்றது ஏன்? எப்படி?
ஜப்பானின் நீதித்துறை அமைச்சர் கெய்சுகே சுசுகி ஊடகம் ஒன்றுக்கு இவர் குறித்து அளித்த பேட்டியில், "9 பேர் அடித்து, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்களின் உடல் பாகங்களை முற்றிலும் சிதைத்து, பெட்டிகளில் மறைத்து, குப்பைக் கிடங்கில் வீசி எறிந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
மேலும், "அவரது சொந்த பாலியல் இச்சைகளுக்காகவும் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காகவும் சுயநலக் காரணங்களுக்காக ஷிரைஷி இந்தக் குற்றங்களைச் செய்திருக்கிறார்" என அமைச்சர் கெய்சுகே சுசுகி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் உயிரிழப்பதற்கு தான் உதவுவதாக ஷிரைஷி அவர்களிடமே தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர்களிடம் பேசி தனது வீட்டுக்கு வரவைத்திருக்கிறார். அதன்பின் அவர்களை கொன்று, அவர்களின் உடல்களைத் துண்டித்து, அதன் சில பகுதிகளை தனது அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே உள்ள குளிர்சாதன பெட்டிகளில் மறைத்து வைத்திருக்கிறார்.
Japan Twitter Killer: ட்விட்டர் கில்லர் சிக்கியது எப்படி?
கடந்த 2017ஆம் ஆண்டில் தான் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக 23 வயது பெண் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். பிறகு அந்த பெண் காணாமல் போயுள்ளார். இவரை போலீசார் தீவிரமாக தேடினர். அப்போதுதான் வழக்கு விசாரணையில் காவல்துறையினரிடம் ஷிரைஷி சிக்கியிருக்கிறார், அதன்பின்னரே இந்த கொடூரமான கொலைகளை வெளிச்சத்திற்கும் வந்தன.
தகாஹிரோ ஷிரைஷி 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்துள்ளார். இவருக்கு ஜப்பான் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்து உத்தரவிட்டது. எனினும், ஷிரைஷியின் வழக்கறிஞர்கள், இவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்றும் உயிரிழந்த 9 பேரும் தாங்கள் உயிரிழப்பதற்கு சம்மதித்துள்ளனர் என்று வாதிட்டனர். ஆனால் அவை செல்லுபடியாகவில்லை. தகாஹிரோ ஷிரைஷி தற்போது தூக்கலிடப்பட்டார்.
Japan Twitter Killer: ஜப்பானில் தூக்கு தண்டனை!
கடந்த 2022ஆம் ஆண்டு டோமோஹிரோ காட்டோ என்பவர் ஜப்பானில் தூக்கிலிடப்பட்டார். அவருக்கு பின் தற்போது ஷிரைஷிதான் தூக்கிலிடப்பட்டுள்ளார். காட்டோ கடந்த 2008ஆம் ஆண்டில் டோக்கியோவில் பெரிய லாரியை தாறுமாறாக ஓட்டிச் சென்று ஒரு மக்கள் கூட்டத்தில் மோதி அசாம்பாவிதத்தை நிகழ்த்தி உள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ந்து, கத்தியால் குத்தி 7 பேரை கொன்றார். அதற்காக இவருக்கு 2022இல் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
ஜப்பானில் தூக்கு தண்டனைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. தூக்கு தண்டனை குறித்து அரசு கடந்த 2024ஆம் ஆண்டில் நடத்திய வாக்கெடுப்பில் 1800 பேர் வாக்களித்தனர். அதில் 83% பேர் தூக்கு தண்டனை தவிர்க்க இயலாது என அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஜப்பான் சட்டத்தின்படி, வழக்கின் இறுதி தீர்ப்பில் இருந்து 6 மாதக் காலத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். சில நேரங்களில் குற்றவாளிகள் தனிச்சிறையில் நீண்ட காலம தனித்துவிடப்படுவார்கள். இது அவர்களை மனநல ரீதியாக பாதிப்புக்குள்ளாக்க வாய்ப்புள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு கடைசி நேரத்தில் தான் எப்போது தூக்கிலிடப்போகிறார்கள் என்பதையே சொல்வார்களாம். அதாவது தூக்கிலிடப்படும் அன்று அதிகாலை கூட சொல்ல வாய்ப்புள்ளதாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ